ஆப்நகரம்

தென்னை விவசாயிகளுக்கு மற்றொரு தலைவலி!

தென்காசி மாவட்டத்தில் தென்னந்தோப்புகளில் கருந்தலைப் புழு நோய் வேகமாக பரவி வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 20 Apr 2020, 7:52 pm
தென்காசி பகுதியில், தென்னையில் கருந்தலை புழு தாக்கத்தால் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுப்போய், இலைகள் கருகி, தேங்காய் விளைச்சல் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil தென்னை விவசாயிகளுக்கு மற்றொரு தலைவலி


தென்காசி மாவட்டம் கீழப்பாவூர், ராஜபாண்டி, வெள்ளகால், நாகல்குளம், பட்டமுடையார்புரம், சாலைப்புதூர், அருணாப்பேரி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகள் சுமார் 600 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் தென்னை சாகுபடியில் செய்துள்ளனர். தற்போது தென்னை மரத்தில் காய் பிடிக்கும் நேரத்தில் கருந்தலை புழு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நோயால் தென்னை மரங்கள் பட்டுப்போய், இலைகள் கருகி, தேங்காய்கள் விளைச்சல் இல்லாமல் காணப்படுகின்றன. மேலும் ஒரு சில விவசாயிகள் தங்களது தோப்புகளில் கருந்தலை புழு நோய்க்கு மருந்து அடித்தும் நோய் தாக்கம் குறையாததால் அருகில் இருக்கும் தென்னந்தோப்புகளில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்களுக்கும் இந்நோய் வைரஸ் நோய் போல் வேகமாக பரவுகிறது.

இதனால் தேங்காய்கள் பறிக்க முடியாமல் மிகப் பெரிய நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். தற்பொழுது கீழப்பாவூர் குளங்களில் போதுமான தண்ணீர் இருக்கிறது. ஆனால், தென்னை மரத்தில் தேங்காய்கள் நல்ல விளைச்சல் இருக்கும் பட்சத்தில் தேங்காய் விளைச்சலின் பலனை அனுபவிக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ஆகவே சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் தென்னை மரங்களை பார்வையிட்டு வேகமாக பரவி வரும் இந்நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நல்ல தீர்வு காண வேண்டும் எனவும், பட்டுப்போன மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி