ஆப்நகரம்

மார்பளவே உள்ள தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு.. எப்படி சாத்தியம் இது?

கன்னியாகுமரியில் மார்பளவு தண்ணீரில் குளித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 29 Mar 2024, 6:55 pm
கன்னியாகுமரி: மார்பளவு உள்ள தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவனது நண்பர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil tenkasi boy died


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவி மிக பிரபலமான சுற்றுலா தலம் ஆகும். இது வழக்கமான அருவிகளை விட சற்று வேறுபட்டது. அதாவது, குற்றாலம், பாபநாசம் போன்ற வழக்கமான அருவிகளில், மலையில் இருந்து தண்ணீர் கொட்டும். நாம் கீழ்ப்பகுதியில் இருந்து அதில் நின்றபடி குளிக்க வேண்டும். ஆனால், திற்பரப்பு அருவில் மலையில் இருந்து கொட்டும் தண்ணீர் ஒரு ஆறு போல செல்லும். எனவே அருவியில் நின்றபடி குளிப்பவர்களும் குளிக்கலாம். நீந்தியபடி குளிக்க ஆசைப்படுவர்களும் அவ்வாறு குளிக்கலாம்.

இந்த சூழலில், தென்காசியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து 18 மாணவர்கள் திற்பரப்பு அருவிக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கு குளித்துவிட்டு அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கு மார்பளவு மட்டுமே தண்ணீர் இருந்ததால், மாணவர்கள் அனைவரும் ஜாலியாக ஆட்டம் போட்டு குளித்துள்ளனர். பின்னர் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த போது, ஒரு மாணவன் மட்டும் காணவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, மீண்டும் நீச்சல் குளத்தில் சென்று தேடிய போது அங்கு மூழ்கிய நிலையில் மாணவன் ஒருவன் இறந்து கிடந்துள்ளான்.

அவனை மாணவர்கள் வெளியே எடுத்து பார்த்த போது, அவன் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த சமுத்திர பாண்டியன் என்பவரின் மகன் ஐயப்பன் என்பது தெரியவந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆழமான நீச்சல் குளத்தில் குளித்த போது இறந்திருந்தாலாவது சரி என்று சொல்லலாம். ஆனால் வெறும் மார்பளவு தண்ணீரில் குளித்த 16 வயது சிறுவன் எப்படி உயிரிழந்திருப்பான் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து அவனது நண்பர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி