ஆப்நகரம்

திராவிட கட்சிகளுக்கு முடிவு ஆரம்பம்? கண்ட்ரோல் இழந்த அண்ணாமலை.. அலறும் அதிமுக

திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ள அண்ணாமலை அதிமுகவுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுதிருப்பது திராவிட கட்சிகளுக்கு ஆபத்தானது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 14 Apr 2023, 12:55 pm
திமுகவினரின் சொத்து பட்டியலை இன்று பவர் பாய்ண்ட் ப்ரெசன்டேசன் மூலம் காட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அண்ணாமலை. ஆனால், இதனால் என்ன பயன் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக தேர்தல் அரசியலை பொறுத்தவரை பிரமாண பத்திரத்தில் காட்டப்படும் சொத்து மதிப்பு வேட்பாளரின் வளர்ச்சியை காட்டிலும் குறைவாக இருக்கும். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டாலும் வெகுஜன மக்களிடையே பல கேள்விகள் எழும்.
Samayam Tamil annamalai dmk files


அதற்கு எண்கள் வாயிலாக பதில் அளித்துள்ளார் அண்ணாமலை. மேலும், இந்த சொத்து பட்டியல் வெளியீடு மக்களை போய் சேர வேண்டும் என்பதற்காகவே தவிர அமலாக்கத்துறையோ அல்லது லஞ்ச ஒழிப்பு துறையோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு அல்ல என்பதை மட்டும் உணர முடிகிறது.

50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் உள்ள திமுக போன்ற சக்தி வாய்ந்த கட்சியை இதுபோன்ற சொத்து பட்டியலை காட்டி சிக்கலில் நிறுத்திட முடியாது. ஆனால், மக்கள் மத்தியில் திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்த முடியும். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் திமுகவை வலுவிழக்க செய்து, மாநிலம் முழுக்க அண்ணாமலையின் செயல் பேசுபொருளாக வேண்டும் என்பதற்காக திமுக சொத்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்தனை ஆண்டு காலம் அதிமுககூட செய்ய துணியாத காரியத்தை டிஜிட்டல் மூலம் அண்ணாமலை செய்திருப்பது நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது.

இது அதிமுகவுக்கு மறைமுகமான அடியும் என சொல்லலாம். திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டதோடு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சியினரின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த பவர் பாய்ண்ட் அதிமுகவை நோக்கித்தான் என்பது உறுதியாகியுள்ளது. இது அண்ணாமலையின் அரசியல் அதிரடி என்று பேசப்பட்டாலும், மத்திய பாஜகவின் கையில் உள்ள அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை கொண்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

எதிர்க்கட்சியின் ஊழல் பட்டியலை மக்களுக்கு காட்டி என்ன பயன்? உண்மையான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் டெல்லி தலைமையிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க சொல்லலாமே என்றும் கேள்விகள் எழுகின்றன. மேலும், அதிமுகவின் ஊழல் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என்று மறைமுகமாக கூறும் அண்ணாமலை அதிமுகவுடன் எதற்காக கூட்டணி வைக்க வேண்டும்? அரசியல் ஆதாயத்திற்கா என்றும் கேள்வி எழுகிறது.

இருப்பினும், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை. அதே சமயம் திமுகவுடனான கூட்டணியை முடித்துக்கொள்ள மேலிடம் விரும்பவில்லை. அரசியல் ஆதாயமாக பார்த்தால் இன்னும் இரண்டு மூன்று தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருக்க வேண்டும். ஆனால், அண்ணாமலையின் நடவடிக்கைகள் அதற்கு எதிராகவே இருந்து வருகிறது. இது டெல்லி மேலிடத்தின் தந்திரமா அல்லது அண்ணாமலையின் தனித்துவ அரசியலா என்ற குழப்பங்கள் தொடர்கின்றன. எதுவாக இருந்தாலும் எதிர் கட்சியின் ஊழல் மற்றும் சொத்து பட்டியலை வெளிப்படுத்த அண்ணாமலை எடுத்துள்ள ரூட் திராவிட கட்சிகளுக்கு ஆபத்துதான்
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி