ஆப்நகரம்

ஏமாற்றம் தரும் தென்மேற்குப் பருவமழை; அரசும், மக்களும் செய்ய வேண்டியது என்ன?

பருவமழை தீவிரமடையும் செய்யும் காலத்தில், பொதுமக்களும், அரசும் என்ன செய்ய வேண்டும் என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 29 Jul 2019, 11:31 am
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை வீசும் பருவ பெயர்ச்சிக் காற்று தென்மேற்கு பருவ பெயர்ச்சிக் காற்று ஆகும். இதன் காரணமாக கேரளாவில் தொடங்கும் பருவமழை, கர்நாடகா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்களில் படிப்படியாக மழை பெய்யத் தொடங்கும். தென்மேற்கு பருவக் காற்றால் தமிழக கடலோரப் பகுதிகள் குறைந்த அளவு மழையை பெறுகின்றன.
Samayam Tamil Dry Lands


தமிழகத்திற்கு கிட்டதட்ட 60% அளவிற்கு வடகிழக்கு பருவ பெயர்ச்சி காற்று மழையை வாரித் தருகிறது. இது அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யக் கூடியது. அதற்கான காலம் இன்னும் இருப்பதால், தென்மேற்குப் பருவமழையை தமிழகம் பெரிதும் நம்பி இருக்கிறது. பருவ நிலை மாறுபாடு காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் மழையின் அளவு குறைந்து வருகிறது.

நடப்பாண்டில் ஜூன் 8ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவ மழை, முதலில் தீவிரம் காட்டியது. ஆனால் பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. தற்போதைய ஆண்டில் தமிழகம், புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை 27% குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது.

சில்லென்று வாரி வழங்கப் போகும் பருவ மழை- தமிழ்நாடு லேட்டஸ்ட் வானிலை நிலவரம்!

கொடைக்கானல் பகுதியில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அங்குள்ள அணைகள் வறண்டு காணப்படுகின்றன. கிடைக்கும் சிறிதளவு நீரையும் சேமித்து வைக்க அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீர் நிலைகளை தூர்வாறுதல், அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இதற்கான நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதேசமயம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை நல்ல மழைப் பொழிவை தந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் நீர் வரத்து அதிகமானது. இதன் காரணமாக காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை அடைந்ததால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விவசாயத் தேவைகளுக்கு ஏற்ப கிடைக்கும் நீரை, படிப்படியாக திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழை பொய்த்து விட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்கள் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

என்னவொரு பிளானிங் - மழை நீரை சேமிக்க விஜயகாந்த் சொல்லும் அட்வைஸ் கேளுங்க!

ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் ஜூன் 1 முதல் ஜூலை 27ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் திருவண்ணாமலையில் 251.1 மிமீ மழை பெய்துள்ளது. இது சராசரி அளவை விட 81% அதிகம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 247.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 56% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை நிச்சயம் உயர்த்தி இருக்கும். இதனால் அடுத்த சில மாதங்கள் பொதுமக்களின் தண்ணீர் தேவை குறைவின்றி பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 73% குறைவான மழைப்பொழிவை தந்துள்ளது.

தமிழனின் ஆச்சரியப்படுத்தும் சூரிய கடிகாரம்- இன்றும் வியக்க வைக்கும் 2,000 ஆண்டுகால அதிசயம்!

தென்மேற்குப் பருவமழை வடதமிழகத்திற்கு நல்ல மழையும், தென் தமிழகத்திற்கு ஏமாற்றத்தையும் தந்துள்ளது என்றே கூறலாம். எனவே வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது பெய்யும் மழை நீரை சேகரிக்கும் வேலையில் பொதுமக்களும், அரசும் ஈடுபட வேண்டும். உடனடியாக நீர் நிலைகளை தூர்வாரி வடகிழக்குப் பருவ மழைக்கு தயாராக வைத்திருப்பது மிகவும் அவசியம். பொதுமக்களைப் பொறுத்துவரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தண்ணீரின் பயன்பாடு அதிகம் இருக்கும் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த செய்தி