ஆப்நகரம்

கும்பாபிஷேகத்தில் சோகம்; கோபுரத்தில் இருந்து குடம் விழுந்ததில் 3 மாத குழந்தை பரிதாபம்!

கோவில் கும்பாபிஷேகத்தில் 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Feb 2019, 8:03 am
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டினம் தேவர் மணல்மேடு தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டியன்(38). இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி காயத்ரி(30). இவர்களுக்கு கிஷோர் என்ற 3 மாதம் ஆண் குழந்தை இருந்தது.
Samayam Tamil Baby Died


இவர்களது ஊரின் பேருந்து நிலையத்தில் உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. எனவே சாமி கும்பிடுவதற்காக காயத்ரி, கிஷோரை தூக்கிக் கொண்டு சென்றார். கோவில் கோபுரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

காயத்ரி கோபுரத்திற்கு கீழே நின்று தரிசனம் செய்து கொண்டிருந்தார். அவருடன் ஏராளமான பக்தர்களும் இருந்தனர். இந்நிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றுவதற்கு சாரம் கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு குடத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் எதிர்பாராதவிதமாக குடம் தவறி கீழே விழுந்தது. இது கீழே சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த செல்வகாளி மீது விழுந்தது. அதேசமயம் குழந்தை கிஷோர் மீதும் விழுந்தது. இதனால் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இருவரையும் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கிஷோர், ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குழந்தை கிஷோர் உயிரிழந்தது.

இதனால் அவனது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகிரி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவில் விஷேசத்தில் குழந்தை உயிரிழந்த சம்பவம், அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி