ஆப்நகரம்

மழையால் வந்த சோகம்: இடி மின்னலில் இருவர் பலி!

தமிழகத்தில் நேற்று பரவலாக பெய்த மழையில் இடி மின்னல் தாக்கி ஒரே நாளில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 23 Sep 2019, 9:10 am
தமிழகத்தின் நீர் தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கப்படாத நிலையிலேயே பல இடங்களில் நல்ல மழை பெய்துவருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்னும் இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Untitled collage (3)


விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், தேனி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று பகல் பொழுதில் நல்ல மழை பெய்தது.

மழையினால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்தாலும் இடி மின்னல் காரணமாக நேற்று இருவர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பேரத்தூர் கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த அன்னபூரணி (வயது 45), முருகன்(35), உஷா (36), கலா (38), அற்புதம் (44), நாகம்மாள் (36), சின்ன பொண்ணு (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் அன்னபூரணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முருகன், உஷா இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பரமக்குடி அருகே குருவிபொட்டல் கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள வயலில் நின்று கொண்டிருந்த எழுபது வயது மூதாட்டி சந்தியாகு அம்மாள் என்பவர், இடி மின்னல் தாக்கியதில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூரில் சிகிச்சை பெற்றுவருவோரை மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அடுத்த செய்தி