ஆப்நகரம்

BE Admission: உங்க சான்றிதழை எப்போ அப்லோட் செய்யணும்னு தெரியுமா?

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் பதிவேற்றம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) தொடங்குகிறது. ஆன்-லைனில் நடைபெறவுள்ள இந்த சான்றிதழ் பதிவேற்றத்துக்கான கால அட்டவணையை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 29 Jul 2020, 8:25 pm
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு (2020-21) ஆன் -லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
Samayam Tamil minister kpa


ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை. ஆன் -லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும். இதுவரை மொத்தம் 1..21 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை, மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது, மாணவர்களுக்கு தரப்படும் விண்ணப்பப்பதிவு எண்ணின் அடிப்படையில், ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மாணவர்கள் வீதம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களில் வெளியாகிறது பிளஸ்2 தேர்வு முடிவுகள்!

குறிப்பிட்ட நாளில் சான்றிதழை பதிவேற்றம் செய்ய முடியாமல்போகும் மாணவர்கள், ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக சந்தேகங்கள் இருந்தால், மாணவர்கள் 044-2235 1014, 2235 1015 ஆகிய எண்ணை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மாணவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்களை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்தபின், ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை அவை சரிபார்க்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் நேரில் வர வேண்டிய அவசியமில்லை.

இதனை தொடர்ந்து, பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி