ஆப்நகரம்

தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை: கணக்கில் வராத ரூ. 10 லட்சம் சிக்கியது!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் சிக்கியது.

Samayam Tamil 12 Mar 2019, 12:02 pm
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் சிக்கியது.
Samayam Tamil tiru


திருப்பூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் விதிமுறைகள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பல்லடத்தை அடுத்த பொள்ளாச்சி சாலையில் நாசவம்பாளையம் பிரிவில், இன்று மாலை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவின் தலைவர் காவல்துறை உதவி ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த பொள்ளாச்சியை சேர்ந்த லோகநாதன் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது, அதில் இருந்த 500 ரூபாய் நோட்டு கட்டுக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிடிபட்ட பணத்திற்கு உண்டான உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதனை அடுத்து பறக்கும் படையினர், லோகநாதனை பல்லடம் தாலுக்கா அலுவலகம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தனது மனைவியின் மருத்துவ செலவுக்கு பணத்தை கொண்டு செல்வதாக லோகநாதன் கூறியுள்ளார். இருப்பினும் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறி, ரூபாய் 10 லட்சத்தை கருவூலத்திற்கு கொண்டு சென்றனர்.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு 24 மணி நேரத்திற்குள்ளாகவே உரிய ஆவணங்கள் இன்றி 10 லட்ச ரூபாய் பிடிபட்ட சம்பவம் பெரும் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி