ஆப்நகரம்

​10,000 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை: அமைச்சர் அறிவிப்பு!

மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள 10,000 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை உயர்த்தி வழங்கப்பட உள்ளது என அமைச்சர் கூறியுள்ளார் .

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 29 Nov 2022, 6:55 am
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள 10,000 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
Samayam Tamil tm anbarasan inspection


குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று (28.11.2022) மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ஆன்டிமானிய தோட்டம், வன்னியபுரம், டாக்டர் தாமஸ் சாலை , கருமாங்குளம், காமராஜ் காலனி , லலிதாபுரம் ஆகிய திட்டப்பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னை மாநகரில் குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் கான்கீரிட் வீடுகளில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்டது. இந்த வாரியம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது .
இலவச மின்சாரம், மானியம் நிறுத்தப்படாது: அமைச்சர் கொடுத்த உறுதி!
இக்குடியிருப்புதாரர்களுக்கு மறுகட்டுமான காலங்களில் வெளியே வாடகையில் தங்குவதற்காக கடந்த கால ஆட்சியில் ரூ.8000 வழங்கப்பட்டு வந்த கருணைத் தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் உயர்த்தி ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புதாரர்களுக்கு படிப்படியாக வழங்கி வருகிறோம்.

சென்னையில் மட்டும் 27,538 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற வீடுகளை இடித்து விட்டு அதே பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தரவேண்டுமென உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும், நடப்பாண்டு ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும் ஆக மொத்தம் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் 15000 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் 10000 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 27,538 வீடுகளும் இடிக்கப்பட்டு படிப்படியாக புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.

ஏற்கனவே 200 மற்றும் 300 சதுர அடியில் இருந்த குடியிருப்புகளில் பொதுமக்கள் சிரமப்பட்டு வசித்து வந்தனர். அனைவரும் சிரமமின்றி வாழ வேண்டும் என்பதற்காக தற்போது கட்டப்படும் அனைத்து குடியிருப்புகளும் 400 சதுர அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் 50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து நிலைத்து நிற்கும்” என தெரிவித்தார்.
ராணுவம் என்னை சுத்தி வளைச்சுருச்சு: சீமான் சொன்ன கதை!
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன். தியாகராயநகர் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி , வாரிய செயலாளர் துர்கா மூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் ச. சுந்தர மூர்த்தி , வாரிய மேற்பார்வை பொறியாளர் எஸ்.சந்திரமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி