ஆப்நகரம்

கொரோனா: 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் ஆணை!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்

Samayam Tamil 10 Jun 2020, 4:42 pm
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றுக்கு மேற்கொண்டு வரும் சிகிச்சை முறைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 4893 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்புனர்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனையடுத்து, அப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் மருத்துவ படிப்பினை முடித்த 574 அரசு பணியில் அல்லாத முதுநிலை மருத்துவ மாணவர்களை ரூ.75,000/- வீதத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய கூடுதலாக நியமிக்க முதல்வர் உத்தரவிட்டார்.

மேலும், மாத ஊதியம் ரூ.60,000/- வீதத்தில் 665 மருத்துவர்களையும், மாத ஊதியம் ரூ.15,000/- வீதத்தில் 365 ஆய்வக நுட்புனர்களையும், மாத ஊதியம் ரூ.12,000/- வீதத்தில் 1230 பல்நோக்கு சுகாதார பணியாளர்களையும் பணி நியமனம் செய்யவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பதிவு செய்யப்படாத கொரோனா உயிரிழப்புகள்: உண்மையை மறைக்கிறதா அரசு?

இவர்கள் 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியில் இணைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த அசாதாரண சூழ்நிலையில் முன்வரிசை களப்பணியாளர்களாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவம் சாந்த பணியாளர்களுக்கும் முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி