ஆப்நகரம்

சசிகலா வருகை: பிரசாரத்தை ரத்து செய்த முதல்வர் பழனிசாமி-பின்னணி என்ன?

சசிகலா நாளை சென்னை வரவுள்ளதையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்

Samayam Tamil 7 Feb 2021, 7:42 pm
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார். விடுதலை நெருங்கிய நேரத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், மருத்துவமனையில் வைத்தே அவர் விடுதலை செய்யப்படுவதற்கான ஆவணத்தில் சிறைத்துறை அதிகாரிகள் கையெழுத்து வாங்கினர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்த சசிகலா, மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சசிகலா பிப்ரவரி 8 ஆம் தேதி (நாளை) தமிழகம் திரும்பவுள்ளார் என்று அமமுக பொதுச் செயலாளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா வருகையை முன்னிட்டு கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இருப்பினும், சசிகலாவின் வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதே சமயம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள நுழைவு வாயில் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் கூடுதலாக சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழக எல்லையில் இருந்து சசிகலா தங்கவிருக்கும் தி.நகர் இல்லம் வரை 30க்கும் மேற்பட்ட இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அமமுகவினர் திட்டமிட்டுள்ளனர். கிண்டியிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் சென்றால் மேலும் 17 இடங்களிலும், இல்லையெனில் மேலும் 7 இடங்களிலும் சென்னைக்குள் வரவேற்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சசிகலா தலைமையில் அதிமுகவின் 100 ஆண்டுகள்; யுவராஜ் சொல்லும் ரகசியம்!

இந்த நிலையில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டம் வழியாக சசிகலா தமிழகம் வருவதால், அந்த சமயத்தில் அப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்டால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் முதல்வரின் பிரசாரத் திட்டத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த செய்தி