ஆப்நகரம்

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறாரா முதல்வர் பழனிசாமி?

முதல்வர் வேட்பாளார் சர்ச்சை, பாஜக கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுக்கு சில முக்கிய உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 13 Aug 2020, 7:30 pm
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து தமிழக அரசியல் களம் தற்போது சுழல ஆரம்பித்துள்ளது. ஆளுங்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் வெற்றிகளை தாண்டி, யார் முதல்வர் வேட்பாளார் என்பதே தற்போது அதிமுகவில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


அதிமுக அரசுக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பதவி வகிக்கும் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சு கட்சிக்குள் நீண்ட காலமாக ஒலித்துவந்தாலும், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தெரிவித்த கருத்துகள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஓ.பி.எஸ்., முதல்வர் வேட்பாளருக்கு இப்போது என்ன அவசரம் என்று கூறியுள்ளார். எடப்பாடியே முதல்வராக தொடர்வார் என்று கூறாமல் ஓ.பி.எஸ். இவ்வாறு கூறியதில் இருந்து, இனி வரும் நாட்களில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் அதிமுகவில் விஸ்வரூபம் எடுக்கலாம் என தெரிகிறது.

எடப்பாடி முதல்வர் வேட்பாளர்: ஓபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

அத்துடன், சசிகலா வருகைக்கு முன்னர் தங்களுக்கான ஆதரவு வட்டங்களை இரு தரப்பும் பெருக்கிக்கொள்ள திட்டமிட்டு வருவதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. கொங்கு பெல்ட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதாரவான நிலைப்பாட்டில் அமைச்சர்கள் பலரும் அணிவகுத்து நிற்கிறார்கள். கணிசமான வாக்கு வங்கியும் மற்ற மண்டலங்களை விட கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், தென் மாவட்டங்களில் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. எனவே, தற்போது முதல்வராக இருக்கும் பழனிசாமி, தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள கணக்கு போட்டு வருவதாக தெரிகிறது.

ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை தர்மயுத்ததின் போது, அவருடன் கை கோர்த்து நின்றவர்கள் பலருக்கும் அவர் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்பும் எடப்பாடி பழனிசாமி, அவரது ஆதரவாளர்கள் உள்பட கட்சியின் சீனியர்கள் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

களத்தில் அதிமுகவுக்கு இடமில்லையா? கூட்டணியில் பாஜக பற்றவைத்த நெருப்பு!

இதற்கு பின்புலமாக அவரது மகன் மிதுன் குமார் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு வட்டத்தை பெருக்கும் வகையில், மிதுன் குமாரின் தூண்டுதலின் பேரிலேயே அமைச்சர்கள் இதுபோன்று பேசுவதாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாக அரசியல் அரங்கில் செயல்படாத மிதுன் குமாரின் இந்த நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினராலும் உற்று நோக்கப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க பாஜகவுடன் கூட்டணி தொடர்பான சர்ச்சைகளும் எழுந்துள்ளன. அண்மை காலமாக அதிமுக நிர்வாகிகள் பலரும் பாஜகவுக்கு எதிரான கருத்துகளை காரசாரமாக முன்வைத்து வருகின்றனர். இதனை பாஜக ரசிக்கவில்லை என்பதால், மேலிடத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அப்செட்டான முதல்வர் பழனிசாமி, பிரச்சினை பெரிதாகி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணியுள்ளதால், அமைச்சர்கள் உள்பட மீடியாவில் தென்படும் அதிமுக நிர்வாகிகளுக்கு சில கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, பாஜக பற்றி கடுமையான கருத்துகளை கூற கூடாது. தேர்தல் கூட்டணி பற்றி பேசக் கூடாது. அப்படியே பேசும் பட்சத்தில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அது பற்றி முடிவெடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையும் விடுத்துள்ளாராம்

அடுத்த செய்தி