ஆப்நகரம்

வானதிக்கு நேர்ந்த அவமானம்... உடனே அழைத்த ஸ்டாலின்

கோவையில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற வானதி சீனிவாசனை மேடைக்கு அழைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

Samayam Tamil 23 Nov 2021, 7:34 am
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (நவம்பர் 22) கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 587.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 89.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Samayam Tamil mk stalin vanathi srinivasan


இந்த விழாவில் பங்கேற்க கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன் வரிசையில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை திமுகவுக்கு ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லை. அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

வானதி சீனிவாசன் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரை மேடைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
ஸ்டாலினை ஈர்த்த செந்தில் பாலாஜி: கோவையை பிடிக்க திமுக திட்டம் இதுதான்!
இந்நிலையில் இது குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “இதை நான் அரசு விழாவாக தான் பார்க்கிறேன். முதல்வர் வாக்குறுதி கொடுத்த திட்டங்களை தற்போது நிறைவேற்ற வந்திருக்கிறார். நான் இந்த தொகுதி மக்களின் பிரதிநிதி. இருந்தாலும் எனக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மூலம் என்னை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து இருந்தார்கள். அது எனக்கு அவமானமாக இருந்தாலும், தனிப்பட்ட என் அவமானங்களை கடந்து, மக்களின் நலன் முக்கியம் என்பதால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தேன். இருப்பினும் எனக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை. கீழே தான் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

இது என் தொகுதியில் நடக்கக்கூடிய அரசு விழா, இருப்பினும் என்னை கீழே அமர வைத்து நடத்துவது தான் அவர்களின் அரசியல் நாகரீகம் என நினைத்துக்கொண்டு நான் அமர்ந்து விட்டேன். என் மனதில் இது குறித்து வருத்தம் இருந்தது உண்மை தான். அப்பொழுது சில அமைச்சர்கள் என்னை பார்த்து முதல்வரிடம் கூறியதை அடுத்து முதல்வர் என்னை மேலே அழைத்து அமர வைத்தார்.
Tamil Nadu Rains: மீண்டும் தமிழகத்தை நோக்கி வரும் புயல் சின்னம்?
இது என் தொகுதி மக்களுக்கு கிடைத்த மரியாதையாக தான் பார்க்கிறேன். எனக்கு கிடைத்த தனிப்பட்ட மரியாதையாக பார்க்கவில்லை. தொடர்ந்து முதல்வர் வழங்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, இன்னும் மேம்படுத்துவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி