ஆப்நகரம்

லண்டன், அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் லண்டன் மற்றும் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 9 May 2022, 1:27 pm
தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் துபாய் சென்று திரும்பினார். ஸ்டாலினின் துபாய் பயணத்தின்போது, சுமார் ரூ.6000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் ரூ.1000 கோடியும், லுலு குழுமத்துடன் ரூ.3500 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Samayam Tamil முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்


துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய ஸ்டாலின், துபாயை போலவே தனது பயணமும் பிரமாண்டமாக அமைந்ததாக தெரிவித்தார். “ஆறு மிக முக்கியத் தொழில் நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப்போகிறது.” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் அடுத்த வெளிநாட்டு பயணம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக லண்டன் மற்றும் அமெரிக்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் மாத இறுதியில் லண்டனுக்கும், ஜூலையில் அமெரிக்காவுக்கும் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் லண்டன் சென்றுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் லண்டன் பயணத்தின் முன்னோட்டமாகவே அவர் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிரஷாந்த் கிஷோரின் வியூகத்தை வீழ்த்துவாரா ராகுல் காந்தி?
துபாய் பயணத்தின் போது, தனது மனைவி துர்கா ஸ்டாலின், மருமகள், மருமகன், பேரக்குழந்தைகள் என தனது குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டார். இது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. மனைவி துர்காவை தவிர்த்து மற்றவர்களை தவிர்த்திருக்கலாம் என்று திமுக தரப்பிலேயே பேசப்பட்டது. இதனால், இந்த பயணத்துக்கான தனி விமான செலவை திமுகவே ஏற்றது என்று விளக்கம் அளிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலினின் அடுத்த பயணம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி