ஆப்நகரம்

MK Stalin: ஒரே விமானத்தில் முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின்; என்ன பேசிக் கொண்டனர் தெரியுமா?

தமிழக முதல்வர் பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணித்துள்ளனர்.

Samayam Tamil 30 Oct 2020, 6:35 am
ராமநாதபுரத்தில் தேவர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் மதுரை செல்ல முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டிருக்கிறார். கடைசியில் இருவரது பயணமும் ஒன்றாகிப் போனது. அதாவது, நேற்று (அக்டோபர் 29) மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் “இண்டிகோ ஏர்லைன்ஸ்” விமானத்தில் இருவரும் முன்பதிவு செய்திருந்தனர். அதில் முதல்வர் பழனிசாமிக்கு ’1A’ இருக்கையும், ஸ்டாலினுக்கு ‘1F’ இருக்கையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை ஒரே வரிசையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil EPS vs MK Stalin.


விமானத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்வது நாகரிகம். இந்த பயணத்தில் இருவரும் ஏதாவது பேசிக் கொள்வார்களா என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் விமான நிலையத்திலும், விமானத்திற்குள்ளும் கோவிட்-19 கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் அதற்கான வாய்ப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுள்ளது.

இதுபற்றி அந்த விமானத்தில் பயணித்த திமுக பிரமுகர் ஒருவர் கூறுகையில், முதல்வர் வருவதற்கு முன்பே அனைத்து வழிமுறைகளையும் நிறைவு செய்து விமானத்தின் இருக்கையில் ஸ்டாலின் அமர்ந்து கொண்டார். விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் முதல்வர் வந்து சேர்ந்தார். இருவரும் தூரமாக அமர்ந்திருந்தனர்.

தம்பியின் உடல்நலனே முக்கியம்: ரஜினிகாந்த் சகோதரர் பேட்டி!

அனைவரும் முகக்கவசங்களும், ஷீல்ட்களும் அணிந்து கொண்டோம். எனவே சிறிய புன்னைகையை மற்றவர்களுக்கு தெரிவிப்பது கூட இயலாத ஒன்று. மதுரையில் விமானம் தரையிறங்கிய உடன், முதல்வர் முதலில் கிளம்பிச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்த பின்னரே ஸ்டாலின் இறங்கிச் சென்றதாக தெரிவித்துள்ளார். இந்த விமானத்தில் தமிழக அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோரும் முதல்வருடன் பயணம் செய்தனர்.

இந்த விமானம் இரவு 7 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. அங்கு நூற்றுக்கணக்கான அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் தங்களது தலைவர்களை வரவேற்க காத்திருந்தனர். இந்த சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் காற்றில் பறந்தது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் விழாவில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வரும், ஸ்டாலினும் மாலை அணிவித்து மரியாதை அளிக்க உள்ளனர்.

அடுத்த செய்தி