ஆப்நகரம்

பி.எஃப்.ஐ., தடை: ஸ்டாலின் மீது சந்தேகம் - கொளுத்தி போட்ட ஹெச்.ராஜா!

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை தமிழக அரசு முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்

Samayam Tamil 28 Sep 2022, 1:03 pm
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மனித உரிமைகளுக்காக பாடுபடும் இயக்கமாகவும் உள்ளது. இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்த அமைப்பின் மீது ஏரளமான குற்றச்சாட்டுகளை பாஜக, இந்து அமைப்பினர் முன்வைத்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் இந்த அமைப்புமீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
Samayam Tamil ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா


இந்த நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர். நேற்றும் சோதனை நடைபெற்றது. அதன் முடிவில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் 247 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பின்னணியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய ரிஹாப் இந்தியா பவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா இனாம்ஸ் கவுன்சில், நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹூமன் ரைட்ஸ் ஆர்கனைசேஷன், நேஷனல் உமன் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அண்ட் ரிஹாப் பவுண்டேஷன் ஆகிய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை அமல் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஃப்.ஐ., தடையை எதிர்த்து போராட்டம்? நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!
இந்த நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை தமிழக அரசு முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை தமிழக அரசு முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். அவர்களின் பயங்கரவாத மற்றும் வன்முறைச் செயல்களை முதல்வர் ஸ்டாலின் இதுவரை கண்டிக்காததால் மாநில மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.” என ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி