ஆப்நகரம்

ஏசி பஸ்ஸில் பயணமா? திங்கள் முதல் வியாழன் வரை சென்றால் குறைந்த கட்டணம்; தமிழக அரசு!

சென்னை: அரசு ஏசி பஸ்களில் குறிப்பிட்ட நாட்களில் செல்பவர்களுக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Dec 2018, 5:32 pm
தமிழக அரசு சார்பில் 34 ஏசி படுக்கை வசதி பஸ்கள், ஏசி இல்லாத 2 படுக்கை வசதி பஸ்கள், 10 அல்ட்ரா கிளாசிக் பஸ்கள், 6 ஏசி படுக்கை மற்றும் இருக்கை வசதி பஸ்கள் என 52 சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்துகள் தனியார் ஆம்னி பஸ்களின் போட்டியைச் சமாளிக்க கொண்டு வரப்பட்டன.
Samayam Tamil AC Bus


இவை நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திருச்சி, போடி, கீழக்கரை, கோவை, பெங்களூரு, எர்ணாகுளம், தஞ்சை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. ஆம்னி பஸ்களை விட, அரசு ஏசி பஸ்களில் 10 முதல் 15% வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதிகப்படியான கட்டணம் காரணமாக பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் ஏசி படுக்கை வசதி பஸ்களின் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

* அரசு ஏசி பஸ்கள் - 10% கட்டணம் குறைப்பு

* ஏசி படுக்கை வசதி பஸ்களில் கி.மீ., சராசரி - 20 பைசா குறைப்பு

* அல்ட்ரா கிளாசிக் பஸ்கள், ஏசி இல்லாத படுக்கை வசதி இல்லாத பஸ்கள் கி.மீ., - 10 பைசா குறைப்பு

* 10% கட்டணக் குறைப்பால், அரசு ஏசி பஸ்களில் - சராசரி ரூ.40 முதல் ரூ.150 வரை குறைப்பு


நேற்று முதல் கட்டணக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதாவது திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மட்டும் கட்டணக் குறைப்பு அமலில் இருக்கும்.

இதுதொடர்பாக பேசிய அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் வி.பாஸ்கரன் கூறுகையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று தொலைதூர அரசு ஏசி படுக்கை வசதி பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இருக்கைக்கான கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி