ஆப்நகரம்

காஞ்சிபுரம்: ரூ. 4000 கோடி முதலீட்டில் புதிய டயர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு ஒப்பந்தம்!

காஞ்சிபுரத்தில் உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய டயர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க சியட் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

Samayam Tamil 5 Jul 2018, 5:47 pm
காஞ்சிபுரத்தில் உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய டயர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க சியட் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
Samayam Tamil tn government

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் இன்று (5.7.2018) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தொழில் துறைக்கும், சியட் நிறுவனத்திற்கும் இடையே, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் கிராமத்தில் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் சியட் நிறுவனத்தின் டயர் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்யவும் தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் கிராமத்தில் இந்தியாவின் பெருந்தொழில் நிறுவனங்களில் ஒன்றான திருவாளர் சியட் நிறுவனம், டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து 10 ஆண்டு காலத்திற்குள் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (5.7.2018) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசு சார்பில் தொழில் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், சியட் நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அனந்த் கோயங்கா அவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தொழில் துறை அமைச்சர் சம்பத், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை சிறப்புச் செயலாளர் திரு. ம.சு. சண்முகம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் துணை செயல் தலைவர் வேல்முருகன், சியட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் டாம் கே. தாமஸ், தலைமை நிதி நிர்வாக அலுவலர் குமார் சுப்பையா, துணை தலைவர் ப. சுந்தரராஜன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அடுத்த செய்தி