ஆப்நகரம்

’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...!

தமிழகத்தில் இன்றைய நாளின் முக்கியச் செய்திகள் பலவற்றின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம். இதற்காக தொடர்ந்து இணைந்திருங்கள் ’சமயம் தமிழ்’ உடன்...

Samayam Tamil 22 Jun 2020, 1:31 pm
தமிழகத்தில் கொரோனா தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இதுபோன்ற மேலும் பல செய்திகளை இங்கே காணலாம்.
Samayam Tamil முக்கியச் செய்திகள்


தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்:

* உடுமலை சங்கர் வழக்கின் தீர்ப்பு தனக்கு அதிருப்தி அளிப்பதாக கவுசல்யா கூறியுள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

* உடுமலை சங்கர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

* நெல்லை மாவட்ட மகேந்திரகிரி மலைப் பகுதியில் இந்திய அரசுக்கு சொந்தமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இஸ்ரோ மையம் மூடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு நல்ல பலன் கிடைத்து வருவதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வெளியூர் பயணங்களுக்கு இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 34 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

* உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

* சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்துள்ளது. ஆலந்தூர், ஐயப்பந்தாங்கல், போரூர், அம்பத்தூர், மடிப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. மேலும் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், பாரிவாக்கம், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம் பகுதிகளில் மழை பெய்திருக்கிறது. இதேபோல் ராயப்பேட்டை, கொளத்தூர், ஆதம்பாக்கம், கோட்டூர்புரம், மயிலாப்பூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது. ராமாபுரம், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்திருக்கிறது.

அடுத்த செய்தி