ஆப்நகரம்

தனது முன்னாள் பதவியை வழங்கி பழனியப்பனை தக்கவைத்த டிடிவி

அமமுகவில் இருந்து நிா்வாகிகள் ஒவ்வொருவராக வேறு கட்சிகளுக்கு தாவியவண்ணம் இருந்த நிலையில், தற்போது அமமுகவின் புதிய நிா்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளாா்.

Samayam Tamil 4 Jul 2019, 5:07 pm
அமமுகவில் இருந்து முன்னாள் அமைச்சா் பழனியப்பன் வேறு கட்சிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் கட்சியின் துணைப் பொதுச்சேயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
Samayam Tamil TTV Dhinakaran 1200


மக்களவைத் தோ்தலுக்குப் பின்னா் அமமுகவில் இருந்து நிர்வாகிகள் பலரும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனா். மேலும் அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின்னா் கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், பொருளாளா் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்புகளுக்கு பிரமுகா்கள் நியமிக்கப்படாமல் இருந்தனா்.

இதனைத் தொடா்ந்து டிடிவி தினகரன் அண்மையில் சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை நேரில் சந்தித்தாா். இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சா் பழனியப்பன், பொருளாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் வகித்து வந்த கொள்கை பரப்பு செயலாளா் பொறுப்பு சி.ஆா்.சரஸ்வதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பழனியப்பன் வேறு கட்சிக்கு செல்லவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவரை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக கட்சியின் துணைப் பொதுச்செயலாளா் என்ற முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பழனியப்பனுக்கு முன்னதாக டிடிவி தினகரன் இந்த பதவியில் இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி