ஆப்நகரம்

நளினி விடுதலையில் எந்த முடிவும் எடுக்க முடியாது: தமிழக அரசு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், நளினியின் விடுதலை குறித்து முடிவெடுக்கப்படாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

TNN 25 Jun 2016, 9:16 am
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், நளினியின் விடுதலை குறித்து முடிவெடுக்கப்படாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Samayam Tamil undecided on rajiv case convicts tamil nadu government
நளினி விடுதலையில் எந்த முடிவும் எடுக்க முடியாது: தமிழக அரசு


கடந்த 1991ல் முன்னாள் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அதன்பின்னர் இவர்களின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால், மேற்கண்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அதற்கு பதிலளிக்காமல், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக 7 கேள்விகளை எழுப்பி, வழக்கை அரசியல்சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த அரசியல்சாசன பெஞ்ச், அனைத்து மாநில அரசுகளும் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு தடை விதித்து கடந்த 2014 ஜூலை 9-ஆம் தேதி உத்தரவிட்டது. பின்னர், இந்த உத்தரவை 2015 ஜூலை 23-ந் தேதி மாற்றியமைத்து உத்தரவிட்டது.

அதன்படி, வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டாலோ, 20 அல்லது 25 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலோ, சி.பி.ஐ. விசாரித்த வழக்காக இருந்தாலோ, அந்த வழக்குகளில் மாநில அரசு தாமாக முன்வந்து தண்டனை குறைப்பு செய்ய முடியாது என அரசியல்சாசன பெஞ்ச் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் நளினியின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது இவ்வழக்கு, வருகிற 27ஆம் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளது.

அடுத்த செய்தி