ஆப்நகரம்

திடீர் உடல்நலக்குறைவு.. திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி.. தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு..

விசிக தலைவர் திருமாவளவன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Authored byஎழிலரசன்.டி | Samayam Tamil 26 Sep 2023, 12:12 pm
விசிக தலைவர் திருமாவளவன் நேற்று காலை வழக்கம் போல மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காங்கிரஸ் ஓபிசி பிரிவு சார்பில் நடந்த கருத்தரங்கில் பங்கெடுத்து பேசினார். இதனிடையே திருமாவளவனுக்கு உடல்சோர்வுடன், உடல்வலியும் வாட்டி எடுத்துள்ளது, சிறிது நேரத்தில் காய்ச்சலும் சேர்ந்துகொண்டது.
Samayam Tamil Thirumavalavan Admitted Hospital


இதனையடுத்து, சென்னை வட பழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் திருமாவளவன் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ததில் வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவரை இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காவிரியில் இவ்ளோ தண்ணீர் வருதா..? நீர் திறப்பை அதிகரித்த கர்நாடகா- துரைமுருகன் சொன்ன புள்ளிவிவரம்!

இந்த நிலையில் விசிக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 30 வரையில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் சென்னையில் இல்லாத காரணத்தினால் தோழர்கள் யாரும் தலைவர் அவர்களை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். திமுக கூட்டணியில் முக்கிய தலைவராக விளங்கும் திருமாவளவன், பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வருகிறார். அத்துடன், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கத் தவறுவதில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக அரசியல் தலைவர்கள் தொண்டர்களை சந்திப்பதற்கு பல கெடுபிடிகள் இருக்கும். ஆனால், திருமாவளவனை விசிகவின் கடைமட்டத் தொண்டர் கூட எப்போது வேண்டுமானாலும் நேரில் சந்திக்கலாம் என்ற அணுகுமுறையைத்தான் வைத்துள்ளார். தினமும் காலை தான் தங்கியிருக்கும் வேளச்சேரி அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போது, குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி மக்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

திருமாவளவன் ஓர் இடத்திற்கு வருகிறார் என்றாலே அங்கு விசிக தொண்டர்கள் கூட்டம் அலைமோதும். தொண்டர்களின் அலையில் மிதந்தபடி தான் அவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் அவரை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இதனால் பலரும் திருமாவளவனை அன்புத் தொல்லை செய்யாமல் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள் என்றெல்லாம் அறிவுரைகள் கூறியுள்ளனர்.

காவிரி பிரச்னை : முதல்வர் வாகனத்தை வழிமறிக்க முயன்ற பி.ஆர்.பாண்டியன்.. குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்..!

ஓய்வில்லாமல் சுற்றுப் பயணம் செய்தது, தொடர்ச்சியாக கூட்டங்களில் பங்கேற்றது உள்ளிட்ட காரணங்களால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமாவளவன் தனது ஓய்வுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.
எழுத்தாளர் பற்றி
எழிலரசன்.டி
நான் எழிலரசன். கடந்த 8 ஆண்டுகளாக டிஜிட்டல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சமூகம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளேன். தற்போது சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer - ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி