ஆப்நகரம்

வேல் யாத்திரை நடத்தும் பாஜக இதற்கு ஆதரவு அளிக்குமா?

தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழில் மட்டுமே வழிபாடு நடத்த வேண்டும் என்று விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்

Samayam Tamil 30 Oct 2020, 9:33 pm
கருப்பர் கூட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் யூ டியூப் சேனல் ஒன்றில் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்தும், புராணங்களை கேலி செய்தும் தொடர்ந்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தமிழர்களின் கடவுளான முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்தும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்று அந்த யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அது நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, முருகனை இழிவுபடுத்தியதாக கூறப்படும் அந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. குறிப்பாக இந்த விவகாரத்தை மிகத்தீவிரமாக கையில் எடுத்து அரசிய செய்த பாஜக வேல் பூஜை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேல் யாத்திரை என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் - சி.பி.எம்

இந்த நிலையில், தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழில் மட்டுமே வழிபாடு நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகனின் அறுபடைவீடுகளான பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களில் தமிழில் மட்டுமே வழிபாடு நடத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.


தமிழ் கடவுள் முருகன் மேல் பக்தி கொண்டு வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ள பாஜக, தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழில் வழிபாடு நடத்த ஆதரவளிக்குமா என்ற தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி