ஆப்நகரம்

கொரோனா: கன்டெக்டர்களின் விசிலுக்கு விடை கொடுத்தாச்சு!

கொரோனா பரவல் காரணமாக நடத்துநர்கள் விசில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Jun 2020, 8:24 am
கொரோனா வைரஸ் தாக்கம் பல்வேறு துறைகளில் பல மாற்றங்களை அதிரடியாக செய்துள்ளது. அந்தவகையில் போக்குவரத்துத் துறையில் அரங்கேறியுள்ள முக்கிய மாற்றம், நடந்துநர்களின் விசிலை இல்லாமல் ஆக்கியது.
Samayam Tamil villupuram bus conductors use wirless bell instead of whistle


தமிழ்நாடு பேருந்துகள் என்றாலே நடத்துநர்களின் விசில் சத்தம் முக்கியமானது. ஓட்டுநருக்கு தெரிவிக்க வேண்டிய அத்தனை தகவல்களையும் விசில் சத்தம் மூலமே நடத்துநர் கடத்திவிடுவார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் விசில்களுக்கு விடையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் விழுப்புரம் மண்டலத்தில் இயக்கப்படும் ஐந்து பேருந்துகளில் செவ்வாய் கிழமை முதல் வயர்லெஸ் மூலம் இயங்கும் மணி பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றன.

கொரோனா: மீண்டும் பொது முடக்கமா, என்ன செய்யப் போகிறது தமிழகம்?

“விசில் மூலம் தகவல் கொடுக்க நடத்துநர்கள் ஒவ்வொரு முறையும் முகக்கவசத்தை கழற்ற வேண்டியுள்ளது. இது கொரோனா பரவலை அதிகப்படுத்த வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதால் வயர்லெஸ் மணி முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்” என போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் அளிக்கும் ஆலோசனைப்படி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களில் பத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணி பேட்டை, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களுக்கு 600 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதற்கு வரவேற்பு இருப்பினும் வயர்லெஸ் மணி நன்கு சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே செயல்பாட்டுக்கு வரவேண்டும் என நடத்துநர்கள் கூறுகின்றனர். “முதியவர்களோ, குழந்தைகளோ படியில் தவறிவிழும் போது நாங்கள் உடனடியாக விசில் சத்தம் எழுப்பி ஓட்டுநரை எச்சரிப்போம். அதேபோல் இதன் பேட்டரி எவ்வளவு நாள் இருக்கும் என்றும் தெரியாது. சில மாதங்கள் இதைப் பயன்படுத்திப் பார்த்தபின்னர் தான் இதிலுள்ள நேர்மறையான அம்சங்கள் தெரியவரும்” என்று கூறியுள்ளனர்.

ஜூலையில் 2.76 லட்சம் பாதிப்பு: தமிழ்நாட்டில் உச்சம் அடைவது எப்போது தெரியுமா?

வைரஸ் பரவலைத் தடுக்க போக்குவரத்துத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சென்னையில் அரசுப் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் இரண்டு மாநகரப் பேருந்துகளில் பேடிஎம் ஆப் மூலம் டிக்கெட்டுக்கான பணம் வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்த வசதியாக பிஒஎஸ் மிஷினையும் அறிமுகப்படுத்தும் திட்டமும் ஆலோசனையில் உள்ளது.

அடுத்த செய்தி