ஆப்நகரம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்: விஷாலின் வேட்புமனு அதிகாரப்பூர்வமாக நிராகரிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளனர்

TNN 5 Dec 2017, 11:17 pm
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளனர்.
Samayam Tamil vishals nomination has been officially rejected by election commission
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்: விஷாலின் வேட்புமனு அதிகாரப்பூர்வமாக நிராகரிப்பு!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவரின் தொகுதியான ஆர்கே நகருக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. முன்னதாக படிவம் 26ஐ பூர்த்தி செய்யாததால், தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில் நடிகர் விஷாலின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்று திமுக, அதிமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால் இரண்டரை மணி நேரம் விஷாலின் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பரிசீலனை தொடங்கிய நிலையில், விஷால் முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதாக தெரிவித்த நடிகர் விஷால், தனது வேட்புமனு மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் இறுதியில் விஷாலின் வேட்பு மனுவை விசாரித்தனர்.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், அவர் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் விஷாலின் வேட்புமனுவை பரிசீலினை செய்த தேர்தல் அதிகாரிகள் அவரின் ஆதாரத்தை ஏற்க மறுத்து, வேட்பு மனுவை நிராகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி