ஆப்நகரம்

இனிமே தான் ஆட்டமே இருக்கு: சசிகலா தேர்ந்தெடுக்கப் போகும் பாதை!

ஆன்மிக சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சசிகலா அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளார்.

Samayam Tamil 13 Apr 2022, 7:19 am
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது என்றும், ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சசிகலா வழக்கை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ், இபிஎஸ் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சசிகலா வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். ''அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும்'' என்று தீர்ப்பளித்தார்.
Samayam Tamil Sasikala


தீர்ப்பை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வரவேற்று பேசினர், சசிகலா இதோடு அரசியலிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என ஜெயக்குமார் பேசியுள்ளார்.

ஆனால் சசிகலாவோ இந்த தீர்ப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது என தற்போது சசிகலா தெரிவித்துள்ளார். சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் சசிகலா.
எடப்பாடியை பொதுச் செயலாளராக்கும் சசிகலா: அடுத்து நடக்கப்போவது என்ன?
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். அதற்கிடையில் அரசியல் ரீதியாக எப்படி வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனக்கு நெருக்கடி எதுவும் இல்லை. தீர்ப்பு குறித்து அதிமுக தரப்பில் கொண்டாட்டங்கள் இருந்தாக பேசப்படுகிறது. ஆனால், நான் அங்கு பார்த்ததே வேறு. கொங்கு மண்டலத்தில் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்" என்றார்.

டிடிவி தினகரன் அமலாக்கத்துறை வழக்கில் விசாரணைக்கு ஆஜரான நிலையில் அதிகுறித்தும் சசிகலாவிடம் கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "எங்களை பொறுத்தவரைக்கும் 1996இல் இருந்தே இது போன்ற வழக்குகளை சந்தித்து வருகிறோம். இதனால் இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல" என்று கூறினார்.
ஆஸ்திரேலியா கிளம்பும் ஸ்டாலின்? தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டம்!
அதிமுக இடத்தை பாஜக பிடிக்க முயல்வது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சசிகலா, "அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. நிறைய கட்சிகள் தங்கள் கட்சியை முதன்மைப்படுத்த நினைக்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. எங்களை பொறுத்தவரைக்கும் அதிமுக ஒருங்கிணைத்து வெற்றிபெற வைக்க வேண்டும். அதை செய்து முடிப்பேன்.

தொடர்ந்து பயணம் செய்துகொண்டு தான் உள்ளேன். ஆன்மிக பயணம் என்ற முறையில் சென்றால் கூட, அரசியல் நிர்வாகிகள் என்னுடன் வருகிறார்கள். எனவே அரசியல் பயணத்தையும் அப்படியே தொடங்க போகிறேன். அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி