ஆப்நகரம்

வெள்ளைக் கொடி காட்டும் மாஜிக்கள்: ஓஹோ கதை அப்படி போகுதா!

முன்னாள் அமைச்சர்கள் திமுக அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வரும் நிலையில் இதன் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 14 May 2021, 3:17 pm
திமுக ஆட்சிக்கு வந்ததும் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பலராலும் பாரட்டப்படுகின்றன.
Samayam Tamil mk stalin


திமுக எடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டி அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் முக்கியமானவர்கள் அதிமுக ஆட்சியில் இருந்தபோது திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்த ராஜேந்திர பாலாஜி மற்றும் ஆர்.பி உதயகுமார்.

முழு ஊரடங்கில் தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு

வார இதழ் ஒன்றுக்கு ராஜேந்திரபாலாஜி பேட்டியளித்துள்ளார். “கடுமையா வேலை செஞ்சு வெற்றி பெற்றிருக்குறாங்க. மு.க.ஸ்டாலினோட உழைப்பைக் குறை சொல்ல முடியாது.... இப்ப கொரோனா தீவிரமா பரவிக்கிட்டிருக்கு. கடுமையான காலகட்டத்துல ஸ்டாலின் முதலமைச்சரா பதவி ஏத்துருக்கார். அவரோட ஆரம்பம் அருமையா இருக்கு” என இதை பேசுனது நம்ம சிவகாசி ராஜேந்திரபாலாஜி தானா என புருவம் உயர்த்த வைத்துள்ளார்.

இதேபோல் ஆர்.பி.உதயகுமார் மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதுரை மாவட்டத்தின் புதிய இரண்டு அமைச்சர்களுக்கு தொகுதி மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தற்போது மிகவும் சவாலான நேரம். கொரோனா இரண்டாம் அலை படுமோசமாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலை கவலையளிக்கிறது. இந்த சூழலில் புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசை பொறுத்தவரை கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் துவக்கத்திலேயே நல்ல முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்” என அவரும் தன் பங்குக்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார்.

அதிகாரிகளுக்கு ஸ்டாலின் ரகசிய உத்தரவு: யாருக்கு போட்ட ஸ்கெட்ச்?

பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ், தனபால் ஆகியோரை நடத்திய விதம், கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்குதல், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், அம்மா உணவகப் பெயரை மாற்றவோ ஜெயலலிதா படத்தை அகற்றவோ வேண்டாம் என்று சொன்னது, கலைவாணர் அரங்கில் ஜெயலலிதா படத்துக்கு உரிய மரியாதை அளித்தது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தியது என எதிர்க்கட்சியினரும் வியக்க வைக்கும் அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.

நிவாரண நிதிக்கான டோக்கனிலோ, நிவாரணப் பொருள்கள் அடங்கிய பைகளிலோ தப்பி தவறி தனது பெயரோ, புகைப்படமோ இல்லாமல் பார்த்துக் கொண்டதோடு தமிழக அரசின் முத்திரையை மட்டும் பயன்படுத்தியது என பாசிட்டிவ் அரசியலை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின்.

எனவே முன்னாள் அமைச்சர்கள் அரசை புகழ்ந்து பேசியதில் ஆச்சரியம் இல்லை என்று கொள்ளலாம். ஆனால் அரசியலில் அதை அப்படி ஒற்றை கோணத்தில் பார்க்க முடியாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அப்படியென்றால் இதன் பின்னால் வேறு என்ன காரணம் இருக்கிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் சற்று யோசிக்க வைக்கிறது.

நள்ளிரவில் பூஜை அறையில் துர்கா: ஸ்டாலின் வெற்றிக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா?

திமுக எதிர்கட்சியாக இருந்தபோது முக்கிய அமைச்சர்கள் தங்கள் துறைகளில் செய்த ஊழல்கள் குறித்து ஒரு பெரிய அறிக்கை தயாரித்தது. அதை ஆளுநரிடம் அளித்து நடவடிக்கை எடுக்க கோரியது. ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் அப்போது மேற்கொள்ளப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அதனாலே கந்தசாமி ஐபிஎஸ்ஸை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நியமித்தார். இவர் குஜராத்தில் அமித் ஷாவையே கைது செய்தவர்.

திமுக அப்போது தயாரித்த ஹிட் லிஸ்டில் முக்கிய இடம் பிடித்தவர்கள்தான் ராஜேந்திர பாலாஜியும், ஆர்.பி.உதயகுமாரும். ஊழல் குற்றச்சாட்டோடு பொதுவெளியில் தரக்குறைவான விமர்சனங்களை திமுக மீது வைத்தவர்கள். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்கிறார்கள். இந்த பட்டியலில் இடம்பெற்ற சி.விஜயபாஸ்கர் ரிசல்ட் வருவதற்கு முன்னரே ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் மூலம் வெள்ளைக் கொடி காட்ட முயற்சி செய்த தகவலும் வெளியானது.
திடீரென வீட்டை மாற்றும் ஸ்டாலின்? இதுக்கு பின்னால இப்படி ஒரு மேட்டரா?

கொரோனா குறைவதற்குள் மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்பதாலே அவர்களது அணுகுமுறையில் உடனடி மாற்றம் தென்படுகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த செய்தி