ஆப்நகரம்

TN BJP: அடுத்த டார்கெட் தமிழகம்; மாஸ்டர் பிளானுடன் புறப்பட தயாரான அமித் ஷா!

தமிழகத்தில் பாஜகவை மையமாக வைத்து பல்வேறு சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

Samayam Tamil 15 Nov 2020, 2:11 pm
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாஜகவிற்கு செல்வாக்கு இருந்தாலும், தமிழ்நாட்டில் அதன் வியூகங்கள் எதுவும் இதுவரை எடுபடவில்லை. திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை சற்றும் அசைத்துப் பார்க்க முடியவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த பிகார் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் பாஜகவிற்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. அம்மாநிலத்தில் முகவரியே இல்லாமல் இருந்த பாஜக, ஐக்கிய ஜனதா தளத்தின் மேல் கூட்டணி என்ற பெயரில் ஏறி சவாரி செய்தது. இதன்மூலம் பிகாரில் தனது காலை வலுவாக தற்போது ஊன்றியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை பின்னுக்கு தள்ளி பெருவாரியான தொகுதிகளில் பாஜக விஸ்வரூப வெற்றியை பதிவு செய்துள்ளது. இதேபோன்ற உக்தியை தமிழகத்திலும் செயல்படுத்த பாஜக தீவிரமாக யோசித்து வருகிறது. இங்கு அதிமுகவின் மீது பாஜக சவாரி செய்து வருகிறது.
Samayam Tamil Amit Shah


ரஜினியின் அரசியல் வருகையை மிகவும் எதிர்பார்த்திருந்த பாஜகவிற்கு தற்போது வரை பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. எனவே அதிமுகவின் கூட்டணி என்பது அத்தியாவசியமாகிறது. ஆனால் சமீப காலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் பாஜக அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை அவர்கள் கழட்டி விட முற்பட்டால், அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை தூசு தட்ட பாஜக தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் பாஜகவை காலூன்ற செய்யும் முயற்சியாக பிரபலங்களை தங்கள் கட்சியில் இணைத்து முக்கிய பதவிகள் அளித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் மோடியின் செல்வாக்கை பரிசோதனை செய்யும் முயற்சியாக இருக்கும். ஏனெனில் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற வலுவான தலைவர்கள் இல்லாத சூழலில், தமிழக மண்ணில் இதைவிட சாதகமான சூழல் பாஜகவிற்கு அமையாது என்றே கூறப்படுகிறது.

சசிகலா ரிலீஸ் எப்போது? எதிர்பார்க்கும் எடப்பாடி - காரணம் இதுதான்!

இதற்கிடையில் தமிழக பாஜகவிற்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ள எல்.முருகன் ’வேல் யாத்திரை’யை தொடங்கினார். தமிழகத்தில் இருக்கும் இந்துக்களின் வாக்கு வங்கியை குறிவைக்க தமிழர்கள் கடவுளான முருகப் பெருமானை கையிலெடுத்துள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆரை வைத்து வேல் யாத்திரைக்கு வீடியோ வெளியிட்டது பேசுபொருளானது. இதற்கு அதிமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பாஜகவின் யாத்திரைக்கு மாநில அரசு பிடி கொடுக்காமல் இருக்கிறது. இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 21ஆம் தேதி தமிழகம் வருகிறார். இவரது வருகை தமிழக பாஜகவிற்கு உத்வேகம் ஊட்டும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அமித் ஷா வருகையால் எதிர்க்கட்சிகள் பயப்படுவதாக தெரிவித்தார். உண்மையில் அச்சப்படும் நிலையில் தான் எதிர்க்கட்சிகள் இருக்கின்றனவா? அமித் ஷா வருகை தமிழக பாஜகவிற்கு எந்தளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது கூடிய விரைவில் தெரியவரும்.

அடுத்த செய்தி