ஆப்நகரம்

எல்லோரும் ரொம்ப சிக்கனமா இருக்கனும்! பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி அட்வைஸ்!!

உலக சிக்கன நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்

Samayam Tamil 29 Oct 2018, 4:21 pm
நாளை் அக்டோபர் 30ம் தேதி உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி பொதுமக்களுக்கு உலக சிக்கன நாள் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:
Samayam Tamil edapadi palanisamy


‘பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 30-ஆம் நாள் "உலக சிக்கன நாள்" கொண்டாடப்படுகிறது.

"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்"


என்ற குறளில் வள்ளுவர் பெருந்தகை, பொருளின் அளவு அறிந்து சிக்கனமாக வாழ்தலின் அவசியத்தை குறிப்பிடுகிறார். சிக்கனமும், சேமிப்பும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. சிக்கனமாக வாழ்ந்தால் தான் சேமிக்க இயலும். சேமித்தால் தான் மனிதனின் நிகழ்காலத் தேவை மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.

ஆகவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, அவர்களது சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை, தமிழ்நாடு அரசின் சிறுசேமிப்புத் துறையும், மத்திய அரசின் அஞ்சலகத் துறையும் இணைந்து செயல்படுத்துகின்ற நூறு சதவிகிதம் பாதுகாப்பானதும், அதிக வட்டியளிக்கக்கூடியதுமான அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்தத் தொகைக்கு உத்தரவாதமும், எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பும் கிடைக்கும். இந்த உலக சிக்கன நாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயனடைந்திட வேண்டுமென, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி