ஆப்நகரம்

உணவில் புழு: சென்னையில் உள்ள பிரபல இட்லி உணவகத்தின் உரிமம் தற்காலிக ரத்து!!

பாரிமுனையில் இயங்கி வரும் முருகன் இட்லி உணவகத்தின் உணவில் புழு இருந்ததையடுத்து அந்தக் கடையின் உரிமத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

Samayam Tamil 11 Sep 2019, 3:30 pm
மதுரை, சென்னை உள்பட பல இடங்களில் இயங்கி முருகன் இட்லி உணவகம் மிகவும் பிரபலமானது. வெளிமாநிலத்தவர்களும் இட்லி உணவுக்காக இந்தக் கடையை தேடி வருவது உண்டு.
Samayam Tamil Idli


பாரிமுனையில் இருக்கும் முருகன் இட்லி உணவகத்தில் வாடிக்கையாளர் டிஆர் பிரபாகரன் உணவு அருந்தும்போது, அதில் புழு இருந்ததாகக் கூறி, உணவுப் பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகைப்படம் அனுப்பியுள்ளார். இதன்பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு செய்து தற்காலிகமாக உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்துள்ளனர்.

உணவகத்தில் ஆய்வு செய்தபோது, கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் எதுவும் பின்பற்றவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, உணவு தயாரிப்பவர்கள் உரிய மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை. கடைக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது என்றாலும், அந்த சான்றிதழை உரிய இடத்தில் கடையில் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைக்கவில்லை. இதன் அடிப்படையில் அந்தக் கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், ''பாரிமுனையில் இருக்கும் முருகன் இட்லி உணவகத்திற்கு வெள்ளிக்கிழமை சென்று இருந்தேன். உணவு ஆர்டர் செய்து இருந்தேன். சாப்பாட்டில் புழு இருந்தது. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தேன். விசாரித்தபோது, அம்பத்தூரில் உணவு தயாரித்து கொண்டு வந்ததாக தெரிவித்தனர். கொண்டு வரும்போது புழு விழுந்து இருக்கலாம் என்று கூறினர். இதையடுத்து புகார் கொடுத்தேன்'' என்றார்.

முருகன் இட்லி உணவகத்துக்கு சென்னையில் 17 கிளைகளும், மதுரையில் 3 கடைகளும், சிங்கப்பூரில் 2 கிளைகளும் உள்ளன. பெரிய உணவகங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

அடுத்த செய்தி