ஆப்நகரம்

ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை... பட்டுக்கோட்டையில் பயங்கரம்

பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Jan 2021, 8:36 am
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெரு பகுதி எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகும். இப்பகுதியில் பட்டுக்கோட்டை கண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி (35) என்பவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Samayam Tamil ரவுடி கொலை
ரவுடி கொலை - பட்டு்க்கோட்டை


இந்த நிலையில் இவரை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஓட ஓட விரட்டி தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரி வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ரவுடி சிரஞ்சீவி உயிரிழந்தார்.

அவரை வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ரவுடி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து அங்கு வந்த பட்டுக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் போலீசார் வெட்டி கொலை செய்யப்பட்ட சிரஞ்சீவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிரஞ்சீவியை வெட்டி கொன்றவர்கள் யார், முன்விரோதம் காரணமாக அவர் வெட்டி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்குள் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நிகழ்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுபோல் தொடர் கொலைகள் நடைபெறாமல் இருக்க போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி