ஆப்நகரம்

துவங்கியது தொடர் ரயில் மறியல் போராட்டம்.. ஸ்தம்பித்தது திருவாரூர்.. ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு!

தென்னக ரயில்வேயை கண்டித்து அனைத்து கட்சி தலைவர்களும் கூட்டாக அறிவித்த தொடர் ரயில் மறியல் போராட்டம் திருவாரூரில் இன்று தொடங்கியது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 28 Nov 2022, 11:14 am
தென்னக ரயில்வேயை கண்டித்து அனைத்து கட்சிகளையும் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தொடர் ரயில் மறியல் போராட்டம் இன்று துவங்கியது.
Samayam Tamil துவங்கியது தொடர் ரயில் மறியல் போராட்டம்
துவங்கியது தொடர் ரயில் மறியல் போராட்டம்


கீழ தஞ்சை எனப்படும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேதாரணியம் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பல முறை மத்திய ரயில்வே துறைக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.


இதனால் திருவாரூர் மாவட்டத்தில் மூன்று இடங்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு இடம் என 4 இடங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய உடன்பாடு எட்டாததால் தொடர் ரயில் மறியல் போராட்டம் திட்டவட்டமாக நடைபெறும் என அனைத்து கட்சி தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.

இதனையடுத்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிவித்தபடி இன்று திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ் கட்சி விவசாய அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் ரயில் உபயோகிப்பாளர்கள் அமைப்பினர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து கொரடாச்சேரி, முத்துப்பேட்டை, சன்னாநல்லூர் பகுதிகளில் 3000க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூரில் தொடர் ரயில் மறியல் போராட்டம் திட்டவட்டமாக நடக்கும் - அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு!

மன்னார்குடி - கோவை இடையே இயக்கப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு திருவாரூர் வந்து பின்னர் கொரடாச்சேரி பகுதி பயணிகள் பயண்படும் வகையிலும் நீடாமங்கலத்திலேயே ரயிலை நிறுத்தி என்ஜின் மாற்றுவதால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது . அதனையொட்டி திருவாரூர் வரை செம்மொழி விரைவு ரயில் சேவை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

மேலும் தொன்மையான ரயில் சேவைகளான நாகூர் ஆண்டவர் விரைவு ரயில், போட் மெயில் விரைவு ரயில், கம்பன் விரைவு ரயில் போன்ற பழமையான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் இயக்க வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடைபெறுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெறும் இடங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி