ஆப்நகரம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண் சடலமாக விழுந்தார்: போலீஸ் விசாரணை!

திருச்சி சமயபுரம் கோயிலில் நேற்று இரவு பக்தர் ஒருவர் மயங்கி விழுந்த இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 21 Sep 2021, 1:09 pm
சமயபுரம் கோயிலில் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பரிகார பூசைகளுக்குப் பின் இன்று காலை 9 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டது.
Samayam Tamil சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண் சடலமாக விழுந்தார்: போலீஸ் விசாரணை!


திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கடவுளைத் தரிசிக்க வருவது வழக்கம்.

அப்படி அம்மனை தரிசனம் செய்யத் திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவைச் சேர்ந்த பிச்சைமுத்து மகன் மோகன்ராஜ்(33) என்பவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்திருந்தார்.

கோயில் உள்ளே அம்மனை தரிசிப்பதற்காகப் பக்தர்கள் செல்லும் வழியில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

நண்பனுக்கு 'விரைவில்' என்ற வாசகத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய ஐந்து பேர் கைது!
இதையடுத்து மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து உடனடியாக கோவில் நிர்வாகத்தினர் சமயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த சமயபுரம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக உடனடியாக நடை சாத்தப்பட்டு பக்தர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். தொடர்ந்து காலை கோயில் நடை வழக்கமாக அதிகாலை 5. 30 மணிக்குத் திறக்கும் நிலையில் இன்று திறக்கப்படவில்லை.

வாஸ்துசாந்தி, சாந்திஹோமம், ப்ரவேசபலி, ரசேஷாக்ன ஹோமம் ஆகிய பரிகார பூசைகளுக்கு பின்னர் காலை 9மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டது. உயிரிழந்த மோகன்ராஜிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி