ஆப்நகரம்

குடிநீர் திட்டப் பணிகள்...அதிகாரிகளுக்கு கெடு!

மத்திய அரசின் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை வரும் மார்ச் மாதத்துக்கள் முடிக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Dec 2020, 1:20 pm
திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசின் (ஜல் ஜீவன் மிஷன்) திட்டத்தின்கீழ், 14 மற்றும் 15 ஆவது மத்திய நிதிக் குழு மானியம் மூலம் ரூ. 71.58 கோடி மதிப்பில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 1,093 குக்கிராமங்களில் உள்ள 98,286 தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Samayam Tamil திருச்சி  மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கு
குடிநீர் திட்டப் பணிகள் ஆலோசனைக் கூட்டம் - திருச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கு


இத்திட்டத்தின் மூலம் கிராம பகுதிகளில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் நெடுந்தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை, வரிசையில் நின்று குடிநீர் பிடிப்பது உள்ளிட்டவை தவிர்க்கப்படும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் குடிநீர்( ஜல் ஜீவன் மிஷன் ) திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

காய்ச்சலா? - கவலை வேண்டாம்- மாநகராட்சி முகாமுக்கு போங்க!

அப்போது, திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை வரும் மார்ச் 2021 ஆம் ஆண்டுக்குள் முடித்திடுமாறு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, நிர்வாகப் பொறியாளர்கள் முருகேசன், எழிலரசன், மாவட்ட குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்கள், உதவி திட்ட அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(கிராம ஊராட்சிகள்), ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி