ஆப்நகரம்

இடத்தை காலி பண்ண முடியாது: கலெக்டர் அலுவலகத்தில் அருந்ததியர் போராட்டம்!

இடத்தை காலி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து அருந்ததியர் காலனி மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 1 Oct 2020, 8:00 pm

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே 30 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் காலனியில் வசித்து வருபவர்கள் காலி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Samayam Tamil அருந்ததியர் போராட்டம்




நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அருந்ததியர் காலனியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் மந்திரம் உள்ளிட்ட சில நபர்களை அரசாங்க இடத்தில் அவர்கள் அனுமதியின்றி வீடு கட்டி குடியிருந்து வருவதாக கூறி அவர்களை 6 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என நாங்குநேரி தனி வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து அருந்ததியர் காலனியை சேர்ந்த மக்கள், இடத்தை காலி செய்ய மறுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ஆட்சியர் காரின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பினர்.

ஆறு மாதத்துக்கு பிறகு மீண்டும் ஓட தயாராகும் நெல்லை எக்ஸ்பிரஸ்!

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகம் உள்பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை, வெளியில் செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதித்தனர். ஐந்து நபர்கள் மட்டும் அலுவலகத்திற்குள் சென்று ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

அடுத்த செய்தி