ஆப்நகரம்

நெல்லை நீர் வளம் திட்டம்: கலெக்டர் விஷ்ணுவை டெல்லிக்கு அழைக்கும் அதிகாரி!

நெல்லை நீர் வளம் திட்டத்தை முன்னோடியாக கொண்டு நாடு முழுவதும் திட்டங்களை தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என தேசிய நீர்வள திட்ட இயக்குனர் கூறியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 4 Feb 2023, 3:23 pm
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நெல்லை நீர் வளம் திட்டம் நாட்டிற்கு முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. நாட்டின் பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த சாத்திய கூறுகளை ஆராய்ந்து முடிவு செய்ய இருப்பதாக தேசிய நீர்வள திட்ட இயக்குனர் அர்ச்சனா வர்மா கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil nellai collector


நீர் மேலாண்மை குறித்த 37ஆவது தேசிய அளவிலான கருத்தரங்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர்வள திட்ட இயக்குனர் அர்ச்சனா வர்மா தலைமை ஏற்றார். இதில் நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தி வரும் மாவட்டங்களின் ஆட்சியர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழகத்தின் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, குஜாராத் மாநிலத்தின் சார்பில் பதான் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்ரீத் சிங் குலாவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் பேசிய குஜராத் மாநிலம் பதாம் மாவட்ட ஆட்சியர் சுப்ரீத் சிங் குலாவி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுஜலாம் சுஃப்லான் ஜல் அபியான் திட்டம் குறித்து விளக்கி பேசினார்.
அண்ணாமலைக்கு புதிய பதவி ஏன்? டெல்லியை தன் பக்கம் திருப்பிய ரகசியம்!
அதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நெல்லை நீர் வளம் திட்டம் குறித்து கருத்தரங்கில் பேசிய நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, “நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை அடையாளம் கண்டு அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைக்கும் பணி மேப்பிங் நடைபெற்றது. இதன் மூலம் 1251 குளங்கள் ஆறு மாத காலம் ஆய்வு செய்யப்பட்டு வரைபடம் மூலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

குளங்களை ஒன்றிணைக்கும் பணியின் மூலம் தண்ணீரே வரப்பெறாத 49 குளங்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. ஆகாயத்தாமரை உள்ளிட்டவைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத அளவில் இருந்த குளங்கள் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் சமூக சீர் நீதி மூலம் தூர்வாரப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தாமிரபரணி ஆற்று நீரை நேரடியாக பொதுமக்கள் குடிக்கும் வகையில் தரம் உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மரங்களையும் கணக்கெடுக்கும் பணி செய்து அதன் வயது உள்ளிட்ட புள்ளி விபரங்களை ஆன்லைன் முறையில் பார்க்கும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

கருத்தரங்கின் நிறைவில் பேசிய ஜல் சக்தி அமைச்சகத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சனா வர்மா நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர் வளம் திட்டம் நாட்டிற்கு முன்னோடி திட்டமாக தெரிவதாகவும் நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு இதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

உதயநிதி செலக்ட் செய்த அந்த அதிகாரி: இது பக்கா ஸ்டாலின் ஃபார்முலா!

மேலும் அவர் நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளை ஒருங்கிணைத்து அதனை மேப்பிங் செய்யும் முறையை நெல்லை நீர் வளம் திட்டத்தை முன்னோடியாக கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் சிறப்பாக நீர் நிலைகளை ஒருங்கிணைத்து அதனை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஆட்சியர் விஷ்ணுவை மத்திய அரசு பணிக்கு வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு பணியில் இணைந்து நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டுமென அவர் கருத்தரங்கில் கேட்டுக் கொண்டார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி