ஆப்நகரம்

நெல்லை அரசு பள்ளிகளுக்கு வரும் சூப்பர் திட்டம்!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலை அரசு பள்ளிகளுக்கு மாவட்ட ஊராட்சி சார்பில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Authored bySM Prabu | Samayam Tamil 4 Dec 2022, 1:25 pm
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் செயல்படும் பள்ளிகளின் உட்க்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் 2023 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக நெல்லையை மாற்ற மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களும் உறுதி ஏற்று செயல்பட வேண்டும் என நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.
Samayam Tamil பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்


நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. அப்போது, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் ஊராட்சிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து பேசப்பட்டது. மேலும் ஊராட்சி தலைவர்கள், ஊரக உள்ளாட்சித் துறை தவிர்த்து மற்ற துறைகளில் உள்ள திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் போதையில்லா நெல்லையை உருவாக்கும் வகையில் அனைத்து ஊராட்சி தலைவர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, “தமிழக அரசின் சிறப்பான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்களிப்பு அதிகம் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊரக உள்ளாட்சி துறையை தாண்டிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்விக்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 2023 ஆம் நிதி ஆண்டுக்குள் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பள்ளிகளில் பூர்த்தி செய்யும் வகையில் இந்த கூட்டம் அமைய வேண்டும்.” என்று அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஊராட்சி பள்ளிகளில் அடிப்படை தேவையாக ஸ்மார்ட் கிளாஸ் என்பது தற்போதைய சூழலில் உள்ளது. ஒரு பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் கிளாஸ் என்ற திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் நிதி உதவியுடன் அமைக்க ஊராட்சித் தலைவர்கள் முயற்சி எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் ஊராட்சி தலைவர்கள் பங்களிப்பு அதிமுக்கியம் வாய்ந்ததாக உள்ளது. நெல்லை மாவட்டம் நீர் மேலாண்மைக்கு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கும் நீர் நிலைகளை 2024 ஆம் ஆண்டுக்குள் புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்றார்.


மேலும், 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே சிறந்த மாவட்டமாக நெல்லை மாவட்டத்தை மாற்றும் வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களும் உறுதி ஏற்று செயல்பட வேண்டும் எனவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அப்போது வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலை அரசு பள்ளிகளுக்கு மாவட்ட ஊராட்சி சார்பில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்து தருவதாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

முதற்கட்டமாக 208 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துக் கொடுக்க உள்ளோம். இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 100 பள்ளிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்படும். மாவட்டத்தில் மொத்தம் 308 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும் அவர் தகவல் தெரிவித்தார். அவர் மாவட்ட ஊராட்சி சார்பில் ஊராட்சிகளில் அடிப்படை பணிகளை மேற்கொள்ள 8 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி