ஆப்நகரம்

தாமிரபரணியில் 60,000 டூ 8,000 கன அடியாக குறைந்த வெள்ள நீர்... இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நெல்லை சீமை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்துள்ளதால் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீர் 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது இதனால் ஆற்றில் வெள்ளம் வடிந்து வருவதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 16 Jan 2021, 2:45 pm
நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
Samayam Tamil தாமிரபரணி  வெள்ளம்
நெல்லை தாமிரபரணி ஆற்றில் வடிந்து வரும் வெள்ளம்


இந்த நிலையில், மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அணைப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கன அடி வரை வெளியேற்றப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 4 நாட்களாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது மழை குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

நிரம்பிய கொண்டே இருக்கும் அணைகள்... தாமிரபரணியில் ஓடி கொண்டே இருக்கும் வெள்ளம்!

இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து 5,740 கன அடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 1,995 கன அடியும், தென்காசி மாவட்டம் கடனா அணையிலிருந்து 512 கனஅடியும், ராமா நதியிலிருந்து 140 கண்ணாடியும் என மொத்தம் 8347 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் படிப்படியாக வடிய தொடங்கியுள்ளது.

இதனிடையே கடும் வெள்ளப்பெருக்கின்போது கருப்பந்துறை வழியாக நெல்லை டவுன் - மேலப்பாளையம் செல்லும் வழியில் உள்ள ஆற்றுப் பாலத்தின் மேல் வெள்ளநீர் சென்றதால் பாதுகாப்பு கருதி காவல் துறையினர் பாலத்தின் இரு புறங்களிலும் மூடி சீல் வைத்தனர். பாலத்தில் செல்ல வாகனங்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்ததை தொடர்ந்து இன்று மதியத்திற்கு பின்பு பாலத்தில் மீண்டும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை வெள்ளம்: நீரில் மூழ்கிய பயிர்கள்... சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்

மேலும் ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட அனைத்து உறைகளும் தண்ணீர் மூழ்கியுள்ளதால் நான்கு நாட்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பொதுமக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும் ஆற்று பகுதியில் உள்ள ஒருசில தண்ணீர் குழாய்களில் தண்ணீர் விழுவதால் அதனை கூட்டமாக நின்று பிடித்துச் செல்கின்றனர். மாவட்டத்தில் சற்று மழை ஓய்து இருந்தாலும் இன்று காலை நிலவரப்படி பாபநாசம் பகுதியில் 15, சேர்வலாறு பகுதியில் 6, மணிமுத்தாறு பகுதியில் 14.2, அம்பாசமுத்திரம் பகுதியில் 12.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அடுத்த செய்தி