ஆப்நகரம்

'ஈ' கூட்டத்தோடு வந்த கவுன்சிலர்... நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற கடும் எதிர்ப்பு கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 25 May 2022, 1:03 pm
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர்கள் கலந்தாய்வு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் குமார் தலைமை தாங்கினார். கமிஷனர் முகம்மது சம்சுதீன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.
Samayam Tamil thirumuruganpoondi municipality


அப்போது, தமிழக அரசு சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும். தற்போது செயல்பட்டு வரும் நகராட்சி அலுவலகத்தில் போதுமான இடவசதி இல்லாததால் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், அணைபுதூர் - ராக்கியாபாளையம் சாலையில் பாலத்தை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

கவுன்சிலர்களின் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நகராட்சி தலைவர் குமார்., நகராட்சிக்கு வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு 8 கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் மீதமுள்ள 19 கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக ஆதரவு தெரிவித்ததால் நகராட்சி அலுவலகம் புதிய இடத்தில் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

மேலும், வரும் 5-ந்தேதி முதல் புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வீட்டு இணைப்புக்கு ரூ.5 ஆயிரமும், வணிக இணைப்புக்கு ரூ.10 ஆயிரமும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு வரும் 1-ந்தேதி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் தேதிக்குள் பணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.இந்த கூட்டத்தில் 38 தீர்மானங்களில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 2 தீர்மானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக 4-வது வார்டு அதிமுக கவுன்சிலர் கார்த்திகேயன், தனது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதால் குடியிருப்புகள் அதிக அளவு ஈ தொந்தரவு இருப்பதாக கூறி பிளாஸ்டிக் கவரில் 100-க்கும் மேற்பட்ட ஈக்களை பிடித்து எடுத்து வந்து கூட்டத்தில் முறையிட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி