ஆப்நகரம்

தமிழக போலீசாரை கெளரவிக்கும் திருப்பூர்.. மும்முரமாக தயாராகும் ஜனாதிபதி கொடி பேட்ஜ்!

தமிழ்நாடு போலீசார் சீருடையில் அணிய ஜனாதிபதி கொடி அடங்கிய பேட்ஜ் திருப்பூரில் தயாராகி வருகிறது.

Samayam Tamil 6 Aug 2022, 1:45 pm
ஜனாதிபதியின் கெளரவக்கொடி தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. இதன் நினைவாக, டி.ஜி.பி. முதல் காவலர் வரை என அனைத்து காவல் துறையினருக்கும், தமிழக அரசின் பேட்ஜ் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
Samayam Tamil தமிழ்நாடு காவல்துறை பேட்ஜ்
தமிழ்நாடு காவல்துறை பேட்ஜ்


ஜனாதிபதியின் கெளரவக்கொடி கிடைத்துள்ளதால், அனைத்து போலீசாரும், சீருடையிலும், இனி ஜனாதிபதியின் கொடியான 'நிஸான்' என்ற சின்னம் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 'லோகோ' இடம்பெற்ற 'பேட்ஜ்' திருப்பூரில் தயாரிக்கப்படுகிறது.

திருப்பூரில் உள்ள 'எடர்நல் டெக்ஸ்டைல்ஸ்' மற்றும் 'ஷைன் டெக்ஸ்டைல்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஜனாதிபதி கொடி அடங்கிய பேட்ஜ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக, 500 'பேட்ஜ்' தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்ஜ் தயாரிக்க மும்பை, டெல்லியில் தலா இரண்டு நிறுவனங்கள் சென்னையில் ஒரு நிறுவனம், மற்றும் திருப்பூரில் நால்வர் மாதிரி தயார் செய்தனர்.
புதர் மண்டி கிடக்கும் கால்வாய்… தமிழக அரசின் கடைக்கண் பார்வை படுமா?

அதில், தரம், கலர் உள்ளிட்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு, சரியான 'லோகோ' தேர்ந்தெடுக்கப்பட்டது. 'லோகோ' வில் இடம்பெற்றுள்ள கலர் நூல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலர்கோட்லா என்ற ஊரில் தயார் செய்யப்பட்டு பின்னர் திருப்பூரில் பேட்ஜ் தயார் செய்யப்பட்டது. 'லோகோ'வில், ஒன்பது கலர் இடம் பெற்றுள்ளன். 17 ஆயிரம் எம்ப்ராய்டரி ஸ்டிச் செய்யப்படுகிறது. முதலில் பேட்ஜ் தயார் செய்ய சரியான அளவில் லேசர் கட்டிங் மூலம் துணி வெட்டி எடுக்கப்படும், பின்னர் எம்ப்ராய்டரி இயந்திரத்தில் ஃபோம் துணி உதவியுடன் பேட்ஜ் எம்ராய்டரி செய்யப்படுகிறது. ஒரு பேட்ஜ் தயாரிக்க 45 நிமிடங்கள் வரை ஆவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

காவல்துறை சீருடையில் இடம்பெறும் ஜனாதிபதி கொடி அடங்கிய பேட்ஜ் தயாரிக்கும் பணி கிடைத்தது தங்களுக்கு பெருமையாக உள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

அடுத்த செய்தி