ஆப்நகரம்

கொட்டும் மழையில் குடையுடன் போக்குவரத்தை சீர் செய்த காவலர்... நெட்டிசன்கள் வாழ்த்து மழை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கொட்டும் மழையில் குடையுடன் போக்குவரத்தை சீர் செய்த காவலருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 1 Oct 2021, 10:26 pm
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், ஆங்காங்கே வெள்ள நீரால் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது.
Samayam Tamil திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று இரவு 7 மணி முதல் அடை மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக கடந்த 2 மணி நேரமாக தொடரும் மழையால் சாலைகளில் இரு சக்கர வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில்,கார், பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாலைகளில் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

இந்நிலையில்,தாராபுரத்தில் உள்ள திண்டுக்கல் - திருப்பூர் சாலையில் உடுமலை பிரிவில் உள்ள சிக்னல் மழையின் காரணமாக திடீரென இயங்காமல் போனது. இதன் காரணமாக உடுமலை பிரிவு சாலையில் இருந்து வரும் வாகனங்களும், மெயின் ரோட்டில் இருந்து உடுமலை செல்லும் வாகனங்களும் சிக்னல் இல்லாததால் சாலையை கடப்பதில் பெரும் சிரமமும்,விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது.

இதை பார்த்த போக்குவரத்து காவலர் ஒருவர் கொட்டும் மழையிலும், கையில் குடையை பிடித்தபடி வாகனப் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்ததை அவ்வழியாக சென்ற ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதலங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

போக்குவரத்தை சீர் செய்வது போக்குவரத்து காவலரின் பணியாக இருந்தாலும், மழையில் மக்கள் மழைக்கு ஒதுங்கி நிற்கும் நிலையில், கொட்டும் மழையில் தனது பணியை மழை தடுப்பு உபகரணங்கள் இன்றி காவலர் ஒருவர் போக்குவரத்தை சீர் செய்வது பாராட்டுகளுடன் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி