ஆப்நகரம்

தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்; வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆந்திராவில் தமிழகத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்தும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 27 Oct 2022, 8:00 pm
ஆந்திர மாநிலம், திருப்பதி, எஸ்.ஆர்.புரம் வடமாலாபேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்களும், மக்களும் சுங்கச்சாவடி ஊழியர்களாலும், உள்ளூர் ஆட்களாலும் ஆயுதங்களைக் கொண்டு மிகக்கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil ntk


இந்த சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு சுங்க சாவடிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று இதனை கண்டித்தும், வெளி மாநிலங்களில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசும், முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக இச்சம்பத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டுக்கு வரும் அண்டை மாநிலத்தவர்களை உரிய மரியாதையோடும், பெரும் மதிப்போடும் நடத்தி, அவர்களது பாதுகாப்பையும், நலவாழ்வையும் தமிழர்கள் உறுதிசெய்துள்ள நிலையில், அண்டை மாநிலங்களின் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு எப்போதும் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவது உள்ளக்கொதிப்பைத் தருகிறது.

கேரளாவில் வழிபாட்டுக்குச் சென்ற சாந்தவேலு எனும் தமிழர், அந்நிலத்தில் வெந்நீர் ஊற்றிக் கொலைசெய்யப்பட்டதும், காவிரிச்சிக்கல் பேசுபொருளாகும்போதெல்லாம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதும், ஆந்திரக்காட்டுக்குள் 20 தமிழர்களை அம்மாநிலக் காவல்துறை சுட்டுக்கொலை செய்ததுமான இனவெறிச்செயல்களின் நீட்சியாகவே, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும், மக்களும் தாக்கப்பட்ட இக்கொடுந்துயரம் அமைந்திருக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தமிழர்கள் நாங்கள் பெருத்த சனநாயகவாதிகள்; பெருந்தன்மையாளர்கள். ஆகவேதான், பெரும் அநீதிகள் இழைக்கப்பட்டபோதிலும் நாங்கள் அறவழியில் நீதிகேட்டு நிற்கிறோம்.

எங்களது சனநாயக உணர்வையும், பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் சாதகமாக்கிக் கொண்டு, இனியும் தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிடலாமென்று கணக்கிட்டால், அது பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரிக்கிறேன். எந்தவிதத் தவறும் இழைக்காத அப்பாவிகளை தமிழர்கள் என்கிற ஒற்றைக் காரணத்துக்காகவே இனவெறி கொண்டு தாக்கிய ஆந்திராவைச் சேர்ந்த கொடுங்கோலர்களின் கோரத்தாக்குதலுக்கு எனது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறியிருந்தார்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி