ஆப்நகரம்

சாலை விபத்தை தடுக்க சூப்பர் ஐடியா… காவல்துறைக்கு குவியும் வாழ்த்து!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சாலை விபத்துகள் அதிகம் என்றும், 2020 ஆண்டு மட்டும் தமிழகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Mar 2022, 10:36 am
சாலை விபத்துகள் பெரும்பாலும் அதிகாலை நேரங்களில் நடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில், விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கி வருகின்றனர்.
Samayam Tamil drivers have welcomed the new initiative taken by the villupuram police to prevent road accident
சாலை விபத்தை தடுக்க சூப்பர் ஐடியா… காவல்துறைக்கு குவியும் வாழ்த்து!



அதிகரிக்கும் சாலை விபத்து

விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவிலான சாலை விபத்துகள் நடந்து வருகிறது. காரணம் சென்னை - திருச்சி, புதுச்சேரி - ஓசூர், திருவண்ணாமலை - புதுச்சேரி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் விழுப்புரம் மாவட்ட வழியாக செல்கின்றன. இதனால், இந்த சாலைகளில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்தாண்டு(2021) மட்டும் 2,137 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில், 480 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்துக்குகளுக்கு கட்டுப்பாடு, குறைந்த அளவிலான வாகனங்கள் இயக்கப்பட்ட போதிலும் இவ்வளவு விபத்துகள் நடந்துள்ளன.

விபத்துக்கான காரணம் என்ன?

இதனால், சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் துறை சார்பில் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகைகள், வேகக்கட்டுப்பாட்டு எச்சரிக்கை, ஒலிப்பெருக்கிகள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. சாலை விபத்துக்கான காரணம் என்வென்று ஆராய்ந்த போது பெரும்பாலான விபத்துகள் அதிகாலை நேரத்தில் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுநர்கள் தூக்க கலக்கத்தில் இருப்பது, சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் எப்போதாவது வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட காரணங்களே விபத்துக்கு வழிவகுப்பது தெரியவந்துள்ளது.

விபத்தை தடுக்க உதவும் தேநீர்

இதனால், அதிகாலை நேரங்களில் ஓட்டுநர்களின் தூக்கத்தை போக்கி புத்துணர்ச்சி அளிக்கும் விதமான விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர், முகம் கழுவ தண்ணீர் பாட்டில் ஆகியவை கொடுத்து சிறிது நேரம் விழிப்புணர்வு கருத்துக்களும் வழங்கப்படுகிறது. மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஏற்பாட்டின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டுநர்கள் வரவேற்பு

காவல்துறையின் இந்த அணுகுமுறைக்கு கருத்து தெரிவித்துள்ள வாகன ஓட்டுநர்கள் “விழுப்புரம் போலீசார் தங்களுக்கு தேநீர் வழங்குவதோடு நட்புடன் பேசுவது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று உணர்ச்சி பொங்க கூறினர்.

பொதுமக்கள் பாராட்டு!

சாலை விபத்தை தடுக்க விழுப்புரம் போலீசார் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி