ஆப்நகரம்

குண்டாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகள் பறிமுதல்... மூன்று பேர் கைது!

திருச்சுழி குண்டாறு பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Samayam Tamil 24 May 2020, 8:05 pm
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய மூன்று டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபட்டதாக மூன்று பேரை கைது செய்து திருச்சுழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணல் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட கரிசல்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Samayam Tamil Virudhunagar illegal sand mining


அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில் இரவு நேரங்களிலும், ஆள்நடமாட்டம் இல்லாத பகல் நேரங்களிலும் சட்ட விரோதமாக மர்ம நபர்களால் மணல் அள்ளப்பட்டு கடத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு நரிக்குடி காவல் ஆய்வாளர் ஜேஸ், கோணபனேந்தல் அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது அவ்வழியே மணல் ஏற்றிக்கொண்டு வந்த மூன்று டிப்பர் லாரிகளை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், எந்த விதமான ஆவணங்களுமின்றி சட்ட விரோதமாக குண்டாற்றில் மணல் அள்ளி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்ததோடு மணல் கடத்தலில் ஈடுபட்டதாக லாரி ஓட்டுநர்கள் பாலமுருகன், மதன்ராஜ், மற்றும் கற்பகபாண்டி ஆகியரை கைது செய்த நரிக்குடி காவல் ஆய்வாளர் ஜேஸ், திருச்சுழி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இவ்விவகாரம் தொடர்பாக திருச்சுழி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மணல் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட கரிசல்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

அடுத்த செய்தி