ஆப்நகரம்

Erectile Dysfunction : விறைப்புக் கோளாறை சரிசெய்ய இத்தனை எளிமையான சிகிச்சைகள் இருக்கா?!...

விறைப்புக் கோளாறு (Erectile Dysfunction) சமீப காலங்களில் அதிகரித்து வருகிற பிரச்சினைகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இதற்கு புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுமுறை என தொடங்கி, இன்னும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. இந்த பிரச்சினையை சரிசெய்ய பெரும்பாலானோர் பரிந்துரை செய்வது வாழ்க்கை முறை மாற்றங்களைத் தான். உண்மையிலேயே வாழ்க்கை முறை மாற்றங்கள் மட்டும் விறைப்புக் கோளாறை சரிசெய்து விட முடியுமா அல்லது இதற்கென சிகிச்சை முறைகள் இருக்கின்றனவா என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

Authored byமணிமேகலை | Samayam Tamil 4 Apr 2023, 7:30 pm
விறைப்புத்தன்மை என்பது உடலின் நரம்புகள், இரத்த நாளங்கள் மற்றும் ஹார்மோன்களோடு தொடர்புடையது. இவற்றில் ஏற்படும் பாதிப்புகளால் இந்த விறைப்புக் கோளாறு உண்டாகிறது. விறைப்புக் கோளாறு (Erectile Dysfunction) ஆணின் பாலியல் வாழ்க்கையை மட்டுமே பாதிக்கிற விஷயம் மட்டுமல்ல, அது இனப்பெருக்க மண்டலத்தையும் பாதிக்கும். இதனால் நிறைய ஆண்கள் மன அழுத்தத்துக்கு தள்ளப்படுகிறார்கள். அது இல்லற உறவுச் சிக்கல்களையும் உண்டாக்கிவிடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
Samayam Tamil can erectile dysfunction be cured causes treatment and lifestyle changes
Erectile Dysfunction : விறைப்புக் கோளாறை சரிசெய்ய இத்தனை எளிமையான சிகிச்சைகள் இருக்கா?!...


​விறைப்புக் கோளாறு ஏற்படக் காரணங்கள் (causes of Erectile Dysfunction)

விறைப்புக் கோளாறுக்கான காரணத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.

1. வாழ்க்கை முறை காரணிகள் (lifestyle factors)
2. மருத்துவ நிலை காரணிகள் (medical factors)


வாழ்க்கை முறை காரணிகள் (lifestyle factors)

புகைபிடித்தல்,
அதிகமாக மது அருந்துதல்,
உடல் பருமன்,
உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இன்மை,
போதை மருந்துகள் பயன்படுத்துவது,
ஆரோக்கியமற்ற டயட் முறை

உள்ளிட்ட வாழ்க்கை முறை காரணிகளால் விறைப்புக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

​மருத்துவநிலை காரணிகள்

நாள்பட்ட சிறுநீரக நோய்கள்,
நீரிழிவு,
இதய நோய்கள்,
உயர் ரத்த அழுத்தம்,
குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு,
உயர் கொலஸ்டிரால்,
வளர்சிதை மாற்றக் கோளாறுகள்,
பார்கின்சன் நோய்கள்,
தூக்கக் கோளாறுகள்,
ஆகிய பல்வேறு மருத்துவ நிலைகளின் காரணமாகவும் விறைப்புக் கோளாறு உண்டாகும். அதேபோல மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட உளவியல் ரீதியான காரணங்களாலும் இந்த விறைப்புக் கோளாறு ஏற்படக்கூடும்.

​உடனடி தீர்வுகள் உண்டா?

விறைப்புக்கோளாறை உடனடியாக சரிசெய்யும் மருந்துகள் என்று சில சப்ளிமெண்ட்டுகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சப்ளிமெண்டுகள் பெரும்பாலும் நேச்சுரல் வயாக்ரா என்கிற பெயரில் விற்கப்படுகின்றன. மூலிகைகளில் இருந்து தயார் செய்யப்படுபவையாக இருந்தாலும் அதை உட்கொள்ளும்போது உடலில் ஹார்மோன் விளைவுகள் ஏற்படும்.

அது உடலில் உள்ள மற்ற மருத்துவ நிலைகளை பாதிப்பதோடு தீவிரப்படுத்தவும் செய்யலாம். அதனால் அதுபோன்ற மருந்துகளை மருத்துவரின் முறையான ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.

​விறைப்புக் கோளாறை கண்டறியும் சோதனைகள்

பாலுறவில் ஈடுபடும்போது தொடர்ச்சியாக பல முறை விறைப்பு நிலையில் பிரச்சினை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள். அணுகி அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து தீர்க்க வேண்டியது முக்கியம்.

முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் மேலே சொன்ன விறைப்புக் கோளாறு ஏற்படுவதற்கான காரணங்களின் பட்டியலில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்று மருத்துவர் கண்டறிவார். அதையடுத்து முழுமையான உடல் பரிசோதனைக்கு பரிந்துரை செய்வார்கள்.

இதய நோய், நீரிழிவு மற்றும் பிற நிலைமைகளின் அறிகுறிகளைக் கண்டறிய இரத்த மற்றும் சிறுநீர் சோதனைகள் செய்யப்படும்.

ஆணுறுப்பின் ரத்த நாளங்களைச் சரிபார்க்க அல்ட்ராசவுண்ட் போன்ற இமேஜிங் சோதனைகள் செய்யப்படும்.

தூக்கத்தில் விறைப்பு நிலை எப்படி இருக்கிறது என்பதை சோதித்துப் பார்க்க இரவில் ஆணுறுப்பைச் சுற்றி ஒரு சாதனத்தை அணியச் செய்து அதன்வழியாக இரவில் இருக்கும் விறைப்புத் தன்மை சோதனை செய்யப்படும்.

இன்ட்ராகேவர்னோசல் ஊசி என்று அழைக்கப்படும் மற்றொரு சோதனையும் இதில் இருக்கிறது. விறைப்புத் தன்மை எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதை அறிவதற்கு ஆணுறுப்பில் ஒரு மருந்தை செலுத்தி சோதித்துப் பார்ப்பார்கள்.

இப்படி விறைப்புக் கோளாறைக் கண்டறிவதற்கு பல்வேறு விதங்களில் அதன் தன்மையைப் பொறுத்து பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

​விறைப்புக் கோளாறுக்கான சிகிச்சைகள்வாழ்க்கை முறை மாற்றங்கள்

புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடல் பருமன், போதை மருந்துகள் பயன்படுத்துதல் போன்றவற்றின் காரணமாக உங்களுக்கு விறைப்புக் கோளாறு ஏற்பட்டால் அதை சரிசெய்ய அந்த பழக்கங்களை முதலில் கைவிட வேண்டும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் விறைப்புக் கோளாறின் தீவிரத்தைக் குறைக்க முடியும்.

​வாய்வழி மருந்துகள்

விறைப்புக் கோளாறின் ஆரம்ப நிலையில் இருந்தாலோ அல்லது விறைப்புக் கோளாறின் அளவு, தன்மைகள் ஆகியவற்றைப் பொருத்து முதல்கட்ட சிகிச்சையாக மருத்துவர்கள் சில வாய்வழி மருந்துகளைப் பரிந்துரை செய்வார்கள்.

இது வயாக்ரா மாத்திரைகள் கிடையாது. ஆணுறுப்பின் ரத்த ஓட்டத்தைத் தூண்டி விறைப்பு நிலையை அதிகரிக்கச் செய்வதற்கான மருந்துகள் இவை.

​டெஸ்டோஸ்டிரோன்

குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோன் காரணமாக விறைப்புக் கோளாறு ஏற்பட்டால், அதற்கு மருத்துவர்கள் டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சையை பரிந்துரை செய்வார்கள்.

இயல்பான, சாதாரண அளவு டெஸ்டோஸ்டிரோன் அளவு இருப்பவர்களுக்கு இந்த சிகிச்சை முறை உதவி செய்யாது. குறைவான ரத்த ஓட்டம், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் ஏற்படும் விறைப்புக் கோளாறை சரிசெய்ய இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

​அல்ப்ரோஸ்டாடில்

ஆணுறுப்பில் அல்ப்ரோஸ்டாடில் என்னும் மருந்து செலுத்தப்படும். இது ஆணுறுப்பில் ரத்தத்தை நிரப்பை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
சிறுநீர்க்குழாயில் செருகப்பட்ட ஒரு சப்போசிட்டரியாகவும் கிடைக்கிறது.
இந்த மருந்து செலுத்தப்பட்டு 5 முதல் 20 நிமிடங்களுக்குள் விறைப்புத்தன்மை உண்டாகும். அந்த விறைப்புத் தன்மை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும்.

இந்த அல்ப்ரோஸ்டாடில் மருந்து க்ரீம் வடிவிலும் கிடைக்கிறது. அதை வாங்கி ஆணுறுப்பின் மேல் மேற்ப்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.

​ED பம்ப்

விறைப்பைக் கோளாறை சரிசெய்ய ED பம்ப் என்னும் வெற்றிடக்குழாய் ஒன்றை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இந்த பம்ப் ஆணுறுப்பின் உள்பகுதியில் இருந்து ரத்தத்தை வேகமாக இழுத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.


இதில் ஆணுறுப்பைச் சுற்றி ஒரு பிளாஸ்டிக் குழாய் பொருத்தப்படும். இந்த குழாயிலிருந்து காற்றை வெளியேற்ற ஒரு வெற்றிட பம்ப் இருக்கும். அதன் நுனிப்பகுதியில் ஒரு வளையம் இருக்கும்.

இந்த குழாயை அகற்றினால் ஆணுறுப்பின் அடிப்பகுதியை நோக்கி அந்த வளையம் நகர ஆரம்பிக்கும். அப்போது விறைப்புத் தன்மை அதிகரிக்கும். இந்த விறைப்புத் தன்மை கிட்டதட்ட 30 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

​அறுவை சிகிச்சை


மேற்கண்ட மற்ற சிகிச்சைகள் பலனளிக்காவிட்டால் அறுவை சிகிச்சை முறை தான் இதற்கான தீர்வாக இருக்க முடியும்.

ஊதப்பட்ட பலூன் போன்ற ஒரு பம்ப் ஆணுறுப்பின் உள்பகுதியில் பொருத்தப்படும். விதைப்பையுடன் இணைத்துப் பொருத்தப்பட்ட இந்த பம்பை அழுத்தும்போது பெல்விக் பகுதியில் உள்ள நீர் மற்றும் காற்று நிறைந்து ஆணுறுப்பை நீனமாகவும் பெரிதாகவும் (பருமனாக) உண்டாக்கும்.

மிக அரிதாக ரத்தத் தமனிகளை அறுவை சிகிச்சை செய்து சரிசெய்து, ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தச் செய்து விறைப்பை அதிகரிக்கச் செய்யும்.

​தெரபி சிகிச்சை

உளவியல் ரீதியான காரணங்களால் உங்களுக்கு விறைப்புக் கோளாறு (Erectile Dysfunction) ஏற்பட்டிருப்பின் அந்த உணவில் ரீதியாக,

மன அழுத்தம்
கவலை
மனச்சோர்வு
உறவு பிரச்சினைகள்
போன்றவற்றை சரிசெய்வதற்கான சிகிச்சையை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்