ஆப்நகரம்

ஆண் மலட்டுத்தன்மையை உண்டாக்கும் காரணங்களில் முக்கியமானவை என்ன தெரியுமா?

குழந்தையின்மை பிரச்சனைக்கு பாதிப்புள்ளாக்கும் தம்பதியரில் பெண்கள் மட்டுமே அதிகளவு கருவுறாமைக்கு காரணமாக இருந்த நிலையில் தற்போது மலட்டுதன்மை பாதிப்படைந்த ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

Samayam Tamil 22 Apr 2020, 1:19 pm
பாதுகாப்பற்ற உடலுறவில் ஒரு வருடங்களை கடந்தும் குழந்தையின்மை பிரச்சனை கொண்டிருக்கும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் மலட்டுத்தன்மையை கொண்டிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. விந்தணுக்கள் எண்ணிக்கை குறைபாட்டால் மலட்டுத்தன்மை பிரசனைக்கு உள்ளாகும் ஆண்கள் குறித்து ஆய்வு செய்ததில் பெரும்பாலும் அவர்களது வாழ்க்கை முறையே இக்குறைபாட்டுக்கு காரணமாக தெரிவிக்கிறது. உலகளவில் 30% ஆண்கள் மலட்டுத்தன்மை கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகிறது. நீங்கள் இன்னொன்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். மலட்டுதன்மை என்பது வேறு, ஆண்மை குறைபாடு என்பது வேறு. மலட்டுத்தன்மைக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
Samayam Tamil these are the reasons for infertility in men
ஆண் மலட்டுத்தன்மையை உண்டாக்கும் காரணங்களில் முக்கியமானவை என்ன தெரியுமா?


அதிக வயது

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய திருமண வயதாக காலங்காலமாக இருந்ததை மாற்றியிருக்கிறது நவீன கால வாழ்க்கை முறை. பெண்கள் பூப்படைந்த காலம் முதல் 15 லிருந்து 20 வருடங்களுக்குள் கருமுட்டையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு பின்பு அவை குறையத்தொடங்கும். அதே போன்று தான் ஆண்கள் இனப்பெருக்கம் செய்யும் வயதும். 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் இனப்பெருக்கதிறன் படிப்படியாக குறைய தொடங்கும். 40 வயதை கடந்த பிறகு இவை மேலும் குறையதொடங்கும்.


தீவிர தொற்றுநோயையும் எதிர்க்கும் சக்தி தரும் துத்தநாகம், எந்த உணவில் இருக்கு!


ஆண்கள் 45 வயதுக்கு பிறகு தந்தையானாலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஒருவித உடல் ஆரோக்கிய குறைபாட்டை கொண்டிருக்க அதிக வாய்ப்புண்டு. இளவயதில் உரிய நேரத்தில் திருமணம் செய்யும் ஆண்கள் பெரும்பாலும் மலட்டுத்தன்மை பிரச்சனையை சந்திக்கு வாய்ப்பும் மிக குறைவு.

வெரிகோசில்

விந்தணுக்களுக்கு அருகிலுள்ள நரம்புகள் வீங்கிய நிலை. இந்த நோயானது ஸ்க்ரோட்டத்தில் நரம்புகள் வீக்கத்தை உண்டாக்குகிறது. இதற்கு சிகிச்சையளிக்காத நிலையில் இவை வ்டெஸ்டிகுலர் சுருகம் மற்றும் மலட்டுத்தன்மையை உண்டாக்குகிறது.


இந்நோயால் இரத்த நாளங்கள் சேதமடைந்து இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது இவை விந்தணுக்களை சேதப்படுத்தவும் குறைக்கவும் செய்கிறது. வெரிகோசெல் ஆன் விந்தணுக்களின் அளவை குறைப்பதோடு அதன் தரத்தையும் குறைக்கிறது. வெரிகோசெல் நரம்பு வீக்கத்தால் விந்தணுக்களை சுற்றி அதிகப்படியான வெப்பநிலை உண்டாகிறது. இவை விந்தணுக்களை உருவாக்குவதிலும் தரமாக இருப்பதையும் சிதைக்கிறது.

​உடல் பருமன்

ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் அனைத்திலும் முதன்மை நிலை உடல்பருமனுக்கு உண்டு. உடல் உழைப்பில்லாமல் அதிக உடல் எடையை கொண்டிருக்கும் ஆண்கள் மறைமுகமாக ஹார்மோன் மாற்றத்தையும் குறைபாட்டையும் சந்திக்கிறார்கள். டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி, தைராய்டு சுரப்பி, பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ், அட்ரீனல் சுரப்பி என்று மாறும் ஹார்மோன் சுழற்சியால் மலட்டுத்தன்மை பிரச்சனையும் அதிகரிக்கிறது. விந்தணுக்களின் தரத்திலும் எண்ணிக்கையிலும் குறைபாட்டை எளிதாக உண்டாக்க முடிகிறது. அதிகரிக்கும் உடல் எடையும் கூட மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும்.

​புகை, மது, போதைப்பழக்கம்

இந்த மூன்றுமே உடலளவிலும் மனதளவிலும் பல குறைபாட்டை உண்டாக்குகிறது என்பதை அறிவோம். புகைப்பிடிக்கும் போது உள் செல்லும் நிகோடின் டெஸ்டிகுலர் திசுக்களுக்கும் செல்கிறது. இவை விந்தணுக்கள் உற்பத்திக்கும் தரத்துக்கும் எதிராக செயல்படுகிறது.


போதை மருந்துகள் ஆல்கஹால் இவை எல்லாமே விந்தணுக்கள் சுருக்கத்துக்கும் குறைபாட்டுக்கும் வழிவகுக்கும்.மது அருந்துவதால் விறைப்பு தன்மையில் பாதிப்பும் விந்தணுக்கள் எண்ணிக்கையில் குறைபாடும் உண்டாகிறது. வாரத்துக்கு 8 முறைக்கு மேல் ஆல்கஹால் உட்கொள்ளும் ஆண்கள் மலட்டுத்தன்மையை சந்திக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு ஒன்றில் புகைபிடித்தவரின் விந்தணுக்களின் எண்ணிக்கையை காட்டிலும் புகைபிடிக்காதவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகவும் தரமாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

​மன அழுத்தம்

மன அழுத்தம் நிச்சயமாக உடலில் எதிர்மறையான இராசயனங்களை சுரக்க செய்யும். இவை நேரிடையாக விரைப்பு பிரச்சனையை உண்டாக்கும். மன அழுத்தம் அதிகம் சந்திக்கும் தம்பதியருக்கு கருத்தரிப்பதில் பாதமான விளைவை உண்டாக்கும் என்று ஆய்வுகளும் உறுதி செய்துள்ளன. குழந்தைபேறு வேண்டி இருக்கும் தம்பதியருக்கு ஒரு வருடம் காத்திருந்தும் அவை நிறைவேறாமல் போகும் போது இருக்கும் மன அழுத்தம் மேலும் அதிகப்படியான மலட்டுத்தன்மையையே உண்டாக்கும்.


அந்த விஷயத்தில் ஆண்கள் பலவீனமா இருந்தா இந்த உணவுகளை கொடுங்க...


இவை தவிர ஆண்கள் பணியிடங்களிலும் அன்றாட வாழ்விலும் மன அழுத்தம் கொண்டிருந்தால் நிச்சயம் அவை பாலியல் வாழ்க்கையில் ஆர்வமின்மையை உண்டாக்கும். மேலும் மலட்டுத்தன்மையை உண்டாக்குவதிலும் தீவிரமாகவே செயல்படும்.

​புற்று நோய் சிகிச்சை

புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை கீமோதெரபி போன்றவற்றை எடுத்துகொண்ட ஆண்களும் மலட்டுத்தன்மை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். புற்றுநோய்க்கு எடுத்துகொள்ளும் மருந்துகள்,ஸ்டீராய்டு மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் விந்தணுக்களின் ஆரோக்கியத்தையும் எண்ணிக்கையையும் குறைக்கும். வீரியமிக்க கட்டிகளால் அவதிபட்டாலும் அவை ஆணின் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கிறது. தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டாலும் கூட அவை விந்தணுக்களின் ஆரோக்கியத்தையும் உற்பத்தியையும் குறைக்கிற்து.

​பணிபுரியும் இடம்

ஆண்கள் வெப்பம் அதிகமாக வெளியிடக்கூடிய இயந்திரங்களின் அருகில் பணி செய்தாலும், இராசயனங்களின் அருகில் பணிபுரியும் சூழ்நிலையில் இருந்தாலும்,பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்தும் இடங்களில் பணிபுரியும் ஆண்களுக்கும், பெயிண்ட் நிறுவனங்கள் மற்றும் கதிர்வீச்சு வெளிப்படும் இடங்களில் பணிபுரிந்தாலும் அவை விந்தணுக்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் பாதிக்கிறது. இவையெல்லாம் ஆரம்பத்தில் கண்டறிந்தால் மலட்டுத்தன்மை குணப்படுத்த முடியும்.

உடற்பயிற்சி

ஆரோக்கியமான உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் தினமும் அதிகப்படியான நேரம் உடலை வறுத்தி உடற்பயிற்சி செய்வது ஆண்விதைப்பைகளில் தொடர்ச்சியாக அழுத்தத்தை உண்டாக்கும். இதனால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் உற்பத்தியும் பாதிக்கும். குறிப்பாக விதைப்பைகளை அழுத்தும் வகையிலான உடல்பயிற்சியை அதிக நேரம் செய்ய கூடாது.

​மடிக்கணினி

லேப்டாப் என்னும் மடிக்கணினிக்கும் மலட்டுத்தன்மைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். ஆண்கள் மணிக்கணக்கில் லேப்டாப் மடியில் வைத்து பயன்படுத்தும் போது விந்துப்பை இருக்கும் இடம் அதிக வெப்பநிலையை அடைகிறது. விதைப்பை சீரான வெப்பநிலையில் போதுமான ரத்த ஓட்டத்துடன் போதுமான அளவு காற்றும் இருக்க வேண்டும். ஆனால் மணிக்கணக்கில் லேப்டாப் மடியில் இருக்கும் போது விதைப்பைகள் சூடாகிறது. இவை விந்தணுக்களின் உற்பத்தியையும் தரத்தையும் குறைக்கும்.


Cervical Cancer : கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த A to Z தகவல்,அறிவோமா?


அதேபோன்று தான் உடலை குறிப்பாக ஆண் உறுப்பை இறுக்கி பிடிக்கும் மிக கனமான ஆடைகளை அணிவதையும் தவிர்க்க வேண்டும்.இறுக்கமான ஆடைகள் விந்தணுக்களின் ஆயுளை குறைக்கவே செய்யும். அதிக சூடான நீரில் குளிப்பது கூட விதைப்பையையும் விரையையும் சூடாக்கவே செய்யும்.

​ஊட்டச்சத்து குறைபாடு

ஆண்கள் ஆரோக்கியமான விந்தணுக்களை பெறவும் இல்லற வாழ்வியலில் ஈடுபடவும் ஊட்டச்சத்து உணவுகளும் தேவை. முறையான உணவு பழக்கம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும் வகையில் உணவு எடுத்துகொள்ள வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு கொண்டிருக்கும் ஆணால் தரமான ஆயுளுடன் கூடிய விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியாது.


மேற்கண்டவை எல்லாமா மாறிவரும் வாழ்க்கை முறையால் மலட்டுதன்மை ஏற்பட வாய்ப்புண்டு என்பதை பார்த்தோம் இவை தவிர மருத்துவ ரீதியிலாக பிறவியிலேயே குரோமோசோம்களில் உண்டாகும் குறைபாடுகள், அம்மைத்தொற்று, காசநோய், பால்வினை நோய், விரைகளில் உண்டாகும் காயம் போன்றவற்றாலும் மலட்டுத்தன்மை உண்டாகும். ஆனால் இந்த மருத்துவ காரணங்களை காட்டிலும் மேற்சொன்ன காரணங்களால் உண்டாகும் மலட்டுத்தன்மையும் கணிசமாக அதிகரிக்கிறது என்பதால் முறையான வாழ்வு முறை, உணவு முறை மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஆண்கள் பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்