ஆப்நகரம்

summer acidity : வெயில்ல நெஞ்சு கொளுத்துதா, தவிர்க்கணும்னா இதை சாப்பிடுங்க!

அதிக வெப்பநிலை நமது உடல் ஆரோக்கியத்தில் அதிக பிரச்சனைகளை உண்டு செய்யும். குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகள் என்று சொல்லலாம். அதில் ஒன்று அசிடிட்டி. இதை எதிர்கொள்ள உதவும் சிறந்த உணவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Authored byதனலட்சுமி | Samayam Tamil 19 Apr 2023, 10:56 pm
கோடை வந்தால் வெப்பத்துடன் போராட வேண்டியுள்ளது. உணவு முறையில் கவனம் செலுத்தாதவர்களுக்கு இது கடுமையான காலம் என்று சொல்லலாம். காரமான மசாலா உணவுகள் பிடித்தமானதே என்றாலும் இந்த காலத்தில் அதை தவிர்க்கவே வேண்டும். இல்லையெனில் வயிற்று கோளாறுகள் பெருக செய்யும். அதிலும் வயிறு உப்புசம், அமிலத்தன்மையின் அசெளகரியம் போன்றவை அதிகரிக்க செய்யும். இதை எதிர்கொள்ள உதவும் உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
Samayam Tamil foods that fight acidity during summer
summer acidity : வெயில்ல நெஞ்சு கொளுத்துதா, தவிர்க்கணும்னா இதை சாப்பிடுங்க!


​கோடைக்காலத்தில் அசிடிட்டி அதிகரிக்குமா?​

ஆம். கோடை வந்தாலே அவை வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்க செய்யும். குறிப்பாக சில உணவுகள் உடலை உஷ்ணப்படுத்துவதோடு வயிறு வீக்கம் அல்லது அமிலத்தன்மை அதிகரிக்க செய்து அசெளகரியங்களை உண்டு செய்துவிடுகிறது. உணவில் கவனம் செலுத்தும் நேரம் இது.

இந்த பருவத்தில் எடுக்கும் உணவுகள் வெயில் கால வெப்பத்தை தணிப்பதோடு அமிலத்திலிருந்து தடுக்கவும் செய்ய வேண்டும். இல்லையெனில் வயிற்றின் இரைப்பை சுரப்பிகளில் அதிகப்படியான வெப்பம் இருக்கும் போது அமிலத்தன்மை நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றம், ரிஃப்ளக்ஸ் மற்றும் புளித்த ஏப்பம் போன்றவற்றை உண்டாக்கலாம்.

​அசிடிட்டியை போக்கும் வாழைப்பழம்​

வாழைப்பழம் பல நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. மிக முக்கியமான ஒன்று அதிகப்படியான அமிலத்தன்மையை நடுநிலையாக்கும் பண்புகள் இதற்கு உண்டு. இதன் பிஹெச் மதிப்பு அமில அதிகரிப்புக்கு சிறந்த தீர்வாக இருக்கும். இது சிற்றுண்டிக்கு மாற்றாக எடுத்துகொள்ளலாம். வழைப்பழம் பொட்டாசியம் நிறைந்துள்ளது. நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரம் கூட. தினசரி ஒரு வாழைப்பழம் எடுத்துகொள்வது உடலில் அமிலத்தன்மையை எதிர்த்து போராட செய்யும்.

​அசிடிட்டியை போக்கும் முலாம்பழங்கள்​

முலாம்பழங்கள், தர்பூசணி போன்றவை அமிலத்தன்மையை எதிர்த்து போராட உதவும் சிறந்த உணவுகள். இதில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது சளி சவ்வை பராமரிப்பதன் மூலம் அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் பிற இரைப்பை நோய்களை தவிர்க்க செய்கிறது.

இந்த பழங்கள் குளிர்ச்சியான பண்புகளை கொண்டுள்ளன. அது நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. இது உடலை நீரேற்றமாகவும் பிஹெச் அளவை குறைக்கவும் செய்கிறது. மேலும் பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

​அசிடிட்டி தவிர்க்க இளநீர் குடியுங்கள்​

கோடை காலத்தில் தண்ணீர் சிறந்த பானம். இது சுத்திகரிப்பு பண்புகள் கொண்டவை. இது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற செய்கிறது. தேங்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக்க செய்கிறது. தினமும் ஓர் இளநீர் குடிப்பது கோடையில் அசிடிட்டியை தவிர்க்க உதவுகிறது.

​அசிடிட்டி தடுக்க குளிர்ந்த பால் குடிக்கலாமா?​

குறிப்பாக குளிர்ந்த பால் அமிலத்தன்மையை எதிர்த்து போராடுவதற்கான பழமையான வழி. பால் வயிற்றில் உள்ள அமிலத்தை உறிஞ்சுகிறது. இது அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சலை தடுக்க செய்கிறது. வயிற்றில் அமிலம் உருவாவதை உணரும் போது நெஞ்செரிச்சல் இருக்கும் போது எதையும் சேர்க்காமல் ஒரு டம்ளர் குளிர்ந்த பால் குடித்தால் போதுமானது.

குளிர்ந்த பால் போன்று குளிர்ந்த தயிர் மற்றும் மோர் போன்றவையும் நிவாரணம் அளிக்கும். இந்த பொருள்கள் வயிற்றை குளிர்விக்கும். குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு நல்லது. இது அமிலம் உருவாவதை தடுக்கிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் அமிலத்தன்மை பிரச்சனைகளை தவிர்க்கவும் மோர் உதவுகிறது.

​அசிடிட்டி தவிர்க்க இஞ்சி உதவுமா?​

இஞ்சி பழங்காலம் முதலே இரைப்பை குடல் கோளாறுகளை குணப்படுத்த செய்கிறது. இஞ்சி உடலில் உள்ள கூடுதல் அமிலத்தன்மையை எதிர்த்து போராட சிறந்த உணவு. இஞ்சியை பச்சையாக நறுக்கி உணவில் சேர்க்கலாம். எனினும் அளவாக சேர்க்க வேண்டும்.

​அசிடிட்டி தவிர்க்க சாலட் சேர்ப்பது நல்லது​

கோடையில் சாலட்கள் முக்கியமானவை. இது விரைவாக ஜீரணமாகும். இலகுவாக இருக்கும். எனினும் அமில வீக்கத்தை குறைப்பதே முக்கியம் எனில் அதில் தக்காளி, வெங்காயம், பாலாடைக்கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பொருள்களை தவிருங்கள். இவை அசிடிட்டியை உண்டாக்காது.

​எலுமிச்சை அமிலத்தன்மையை குறைக்கலாம்​

எலுமிச்சை அமிலத்தன்மை கொண்டது. இது உடனடி நிவாரணம் அளிக்க செய்யும். கல்லீரலை வலிமையாக்குவதற்கும் உடலை நச்சு நீக்கவும் செய்கிறது. கோடையில் தினசரி ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு குடிப்பது அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இது உடலில் நீரிழப்பையும் உண்டு செய்யாது.

​அசிடிட்டியை எதிர்த்து போராட வெல்லம் உதவும்​

வெல்லம் அமிலத்தன்மையை எதிர்த்து போராட செய்யும். இதில் மெக்னீசியம் உள்ளது. உடலில் நொய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த செய்வதோடு உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்கும். அதனால் தான் கோடையில் வெல்ல பானகம் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

மேற்கண்டவை உங்கள் அசிடிட்டியை தீவிரமாகாமல் தடுக்கும். அசிடிட்டியை குணப்படுத்தவும் செய்யும்.

எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்