ஆப்நகரம்

அழகர் கோயிலில் சிறப்பு பூஜை சித்திரைத் திருவிழா நிறைவு!

சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு கிளம்பிச் சென்று, வைகை ஆற்றில் இறங்கிய அழகர் மீண்டும் அழகர்கோவிலுக்கு வந்தார். அதையடுத்து சிறப்பு பூஜையுடன் சித்திரைப் பெருந்திருவிழா நிறைவுற்றது.

TOI Contributor 27 Apr 2016, 12:50 pm
சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு கிளம்பிச் சென்று, வைகை ஆற்றில் இறங்கிய அழகர் மீண்டும் அழகர்கோவிலுக்கு வந்தார். அதையடுத்து சிறப்பு பூஜையுடன் சித்திரைப் பெருந்திருவிழா நிறைவுற்றது.
Samayam Tamil azhakar temple chithirai thiruvizha
அழகர் கோயிலில் சிறப்பு பூஜை சித்திரைத் திருவிழா நிறைவு!

மதுரையில் முக்கியத் திருவிழாவாக சித்திரைப் பெருந்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா துவங்கும். தினமும் காலையும் மாலையும் சுவாமியும் அம்பாளும் வீதியுலா வருவார்கள்.
அதேபோல் இந்த வருடமும் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடந்தேறியது. தினமும் ஒவ்வொரு விதமான வாகனங்களில், ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் சொக்கநாதரும் மீனாட்சி அன்னையும் வீதியுலா வந்தார்கள்.
இதையடுத்து தேரோட்ட வைபவமும் சிறப்புற நடைபெற்றது. முக்கிய நிகழ்வான, சொக்கேசருக்கும் மீனாட்சிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, மதுரையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் இருந்து கள்ளழகர், மதுரையை நோக்கி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி மதுரைக்கு வரும் அழகருக்கு, வழிநெடுக எதிர்சேவை செய்து வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, வழியெங்கும் மேள தாளம் முழங்க வரவேற்றார்கள் பக்தர்கள். தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்த அழகருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.
விடிய விடிய நடந்த இந்த விழாவில், அழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் செய்யப்பட்டன.
விடிந்ததும் வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசித்தனர். பச்சைப் பட்டாடையில் காட்சி தந்த அழகரைக் கண்டு பரவசமானார்கள்.
பிறகு ராமராயர் மண்டபத்தில், தசாவதாரம் எனப்படும் பத்து திருக்கோலங்களில் திருக்காட்சி தந்தருளினார் அழகர். இதையடுத்து மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவத்துக்குப் பிறகு, அழகர்கோவிலை நோக்கி மதுரையில் இருந்து புறப்பட்டார் கள்ளழகர்.
அவருக்கு வழியெங்கும் வரவேற்பு தரப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு அழகர்கோவிலுக்கு வந்த கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இன்று சுவாமி தரிசனம் செய்தார்கள். இந்த விசேஷ பூஜையுடன் மதுரையில் சித்திரைப் பெருந்திருவிழா நிறைவுற்றது.
நிறைவு பூஜையில் கலந்துகொள்ள மதுரையில் இருந்தும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அழகர்கோவிலுக்கு வந்திருந்தார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்