ஆப்நகரம்

திருக்கச்சூரில் கோலாகலம்;சுந்தரர் பூஜை மற்றும் அன்னதானம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிக்ஷை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும்.

TNN 10 Aug 2016, 6:09 pm
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கச்சூர். சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம் ஸ்ரீகச்சபேஸ்வரர். அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான்.
Samayam Tamil festival and special poojas in thirukachur temple
திருக்கச்சூரில் கோலாகலம்;சுந்தரர் பூஜை மற்றும் அன்னதானம்!


சுந்தரர் இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர்.

உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார்.

கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உத்ஸவராகவும் உள்ள இந்த ஆலயத்தில், விருந்திட்ட ஈசன் சிவனாருக்கு தனிச்சந்நிதியே அமைந்து உள்ளது. அருகில் சுந்தரரும் சந்நிதி கொண்டு காட்சி தருகிறார்.

இன்று காலையில், கோலாகலமாக நடைபெற்றது விருந்திட்ட ஈசனுக்கு விழா. சிவனாருக்கும் சுந்தரருக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதன் பிறகு, விதம்விதமான சித்ரான்னங்களால் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு, பிறகு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சுந்தரர் குருபூஜை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்