ஆப்நகரம்

மாசி மகத்தில் புனித நீராடுவது ஏன்? மூன்று முறை மூழ்கி எழுவதற்கு என்ன காரணம்?

மாசி மாதத்தின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று மாசி மகம். இந்த மாதத்தில் விரத நாட்களில் யார் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். மாசி மாதத்தில் செய்யப்படும் வழிபாட்டிற்கு இரண்டு மடங்கு பலன் கிடைக்கும் என்பதனால், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம், மாசி மாத மகாசிவராத்திரி, மாசி அமாவாசை ஆகியன அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 20 Feb 2023, 2:24 pm
மாசி மகத்தன்று கும்பகோணத்தில் உள்ள மகா மகம் குளத்தில் புனித நீராடுவது மிகப் பெரிய புண்ணியத்தை தரும். மாசி மாதத்தில் தினமும் சரஸ்வதி அந்தாதி பாடி வழிபட்டால் சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் கிடைத்து கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்கு முடியும். மாணவர்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து சரஸ்வதியை வழிபட்டால், அவரின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.
Samayam Tamil masi magam holy bath significance and benefits
மாசி மகத்தில் புனித நீராடுவது ஏன்? மூன்று முறை மூழ்கி எழுவதற்கு என்ன காரணம்?


மாசி மகம் 2023 :

தமிழ் மாதங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது மாசி மாதம் ஆகும். இதை கடலாடும் மாதம் என்றும், தீர்த்தம் ஆடும் மாதம் என்றும் குறிப்பிடுகிறார்கள். மாசி மாதத்தின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நட்சத்திரமும், ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடு இருமடங்கு பலனை தரும் என்பது ஐதீகம்.



மாசி பெளர்ணமி, மாசி அமாவாசை, மாசி மகம், மகா சிவராத்திரி ஆகியன மாசி மாதத்தில் மிக முக்கியமான நாட்களாகும். பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் தரும் விரதமான கேதார கெளரி விரதம் இருப்பதும் இந்த மாசி மாதத்தில் தான். இஷ்ட தெய்வ வழிபாடு, குல தெய்வ வழிபாடு ஆகியவற்றிற்கும், தோஷங்கள், பாவங்கள் விலகுவதற்கும் விரதம் இருந்து வழிபட வேண்டிய மாதம் மாசி மாதமாகும்.

சோமவார அமாவாசை : எப்படி வழிபட்டால் நினைத்தது நடக்கும் ?

மாசி மகம் சிறப்பு :

சூரியனின் இயக்கத்தை பொறுத்தே ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெறுகின்றன. அப்படி சூரியன் கும்ப ராசியில் பயணிக்கும் மாதம் மாசி மாதம். கும்ப ராசியில் சூரியனும், மக நட்சத்திரத்தில் சந்திரனும் பயணிக்கும் நாள் மாசி மகம் எனப்படுகிறது. அதே போல் கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சிம்ம ராசியில் சந்திரனும் குருவும் இணைந்து இருப்பதை மகா மகம் என்கிறோம். இது போன்ற கிரக சேர்க்கை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும். சில நேரங்களில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் வரும்.

சிவ பதிகம் : தீராத நோய்களையும் தீர்க்கும் திருநீற்றுப்பதிகம்

மாசி மகம் புனித நீராடல் உருவான கதை :

ஒருமுறை வருண பகவான் தோஷம் காரணமாக கட்டுண்ட நிலையில் கடலுக்கு அடியில் அழுத்தி வைக்கப்பட்டிருந்தார். இதனால் பூமியில் மழை இல்லாமல் எங்கும் வறட்சி, பஞ்சம் நிலவியது. அனைத்து உயிர்களும் குடிப்பதற்கு கூட நீர் இன்று வாடின. இதனால் தேவர்கள் அனைவரும் சிவ பெருமானிடம், வருண பகவானை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என வேண்டினர்.

உலக உயிர்களின் நலனுக்காக வருண பகவானை தோஷங்களில் இருந்தும், கட்டுக்களில் இருந்தும் விடுவித்தார் சிவ பெருமான். அவ்வாறு வருணனுக்கு விடுதலை கிடைத்த நாள் மாசி மகம். தான் தோஷ நிவர்த்தி பெற்ற இந்த நாளில் புனித நீராடும் ஒவ்வொருவரின் பாவங்களும், தோஷங்களும், துன்பங்களும் விலக வேண்டும் என வருண பகவான் சிவ பெருமானிடம் வேண்டினார். அவ்வாறே சிவ பெருமானும் வரமளித்தார். இதனாலேயே மாசி மகத்தன்று புனித நீராடும் வழக்கம் வந்தது.

பிப்ரவரி மாத அமாவாசை 19 ம் தேதியா? 20 ம் தேதியா?

மூன்று முறை முழ்கி எழுவது ஏன்?

மாசி மகத்தன்று கடல், புனித நதிகள், குளங்களில் நீராடுபவர்களுக்கு சிவ பெருமானின் அருளும், பெருமாளின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். பொதுவாக புனித நீராடும் போது மூன்று முறை மூழ்கி எழத வேண்டும் என்பார்கள். இப்படி மூன்று முறை மூழ்கி எழுவதால் மூன்று விதமான நன்மைகள் கிடைக்கிறது. முதல் முறை மூழ்கி எழும் போது பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கி எழும் போது முக்தி கிடைக்கும். மூன்றாவது முறை மூழ்கி எழும் போது ஈடு இணையில்லாத புண்ணிய பலன்கள் கிடைக்கிறது என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

மாசி மகம் வழிபாட்டின் பயன்கள் :

மாசி மகத்தன்று புனித நீராடி பெருமாளை துளசி சாத்தி வழிபட்டால் வைகுண்ட பதவி கிடைக்கும். அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்தால் இன்பமான வாழ்வும், வெற்றிகளும் கிடைக்கும். சரஸ்வதியை வழிபட்டால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம். குடும்ப ஒற்றுமை சிறக்கும். குழந்தை பேறு வாய்க்கும்.

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்